கரோனா இல்லை என ஜிப்மர் திருப்பி அனுப்பிய நபருக்கு அரசு மருத்துவமனையில் தொற்று உறுதி

ஜிப்மர் மருத்துவமனை: கோப்புப்படம்
ஜிப்மர் மருத்துவமனை: கோப்புப்படம்
Updated on
2 min read

ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து திருப்பி அனுப்பிய கோயம்பேட்டிலிருந்து வந்த நபருக்கு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை கோவிட்-19 மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு புதுச்சேரி, தமிழகம் மற்றும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலங்களுக்கான கோவிட்-19 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கரோனா தொற்று இல்லை என ஜிப்மர் மருத்துவமனையால் திருப்பி அனுப்பப்பட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த நபருக்கு, புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (மே 7) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"புதுச்சேரியில் கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் 2 கரோனா நோயாளிகளில் ஒருவருக்கு நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்குத் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. இன்று மீண்டும் அவருக்குப் பரிசோதனை செய்யப்படும். அதிலும் அவருக்குத் தொற்று இல்லை என்று வந்தால் அவர் வீட்டுக்கு அனுப்பப்படுவார்.

மற்றொரு நோயாளிக்கு நாளை பரிசோதனை செய்யப்படும். அடுத்த பரிசோதனை 9-ம் தேதி செய்யப்படும். இரண்டிலும் தொற்று இல்லை என்று வந்தால் அவரும் வீட்டுக்கு அனுப்பப்படுவார்.

மாஹே நோயாளிக்கு நேற்று இல்லை என்று வந்தது. நேற்றைய பரிசோதனையின் முடிவு இன்று மாலை வரும். அப்போது தொற்று இல்லை என்று உறுதியானால் அவரும் வீட்டுக்கு அனுப்பப்படுவார்.

விழுப்புரத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சென்னை கோயம்பேட்டில் பணியாற்றி வந்தார். ஊடரங்கு காரணமாக சென்னையில் ஒரு உணவகத்தில் நண்பர்களுடன் தங்கியிருந்தார். பின்னர் விழுப்புரம் சென்று வீட்டுக்குச் செல்லாமல் உணவகத்தில் தங்கியுள்ளார். அவருடைய தாயார் ஜிப்மரில் பல்நோக்கு ஊழியராகப் பணிபுரிந்து வருகின்றார்.

இந்நிலையில், அந்த நபர் தனக்கு சளி, இருமல் இருப்பதாக ஜிப்மர் சென்று பரிசோதித்துள்ளார். அங்கு அவருக்கு கரோனா இல்லை என்று தெரிவித்ததாகக் கூறி அந்த நபர், தொடர்ந்து கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு நேற்று சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்தபோது அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவர் அங்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவர் கடந்த 15 நாட்களாக சென்னையில் பல இடங்களுக்குச் சென்று வந்துள்ளார். அவருடைய நண்பர்கள் 5 பேரையும் அடையாளம் கண்டு தொற்று உள்ளதா? என்று பரிசோதிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். சனிக்கிழமைக்குள் புதுச்சேரியில் கரோனா தொற்று ஜீரோவாக மாறியிருக்கும் என்று மகிழ்ச்சியில் இருந்தோம். ஆனால் இச்சூழ்நிலையில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாட்டுத் தளர்வின் முதல் நாளன்று இருந்த மக்கள் கூட்டம் போல் தற்போது கூட்டம் இல்லை. மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தருகின்றனர். வரும் 17-ம் தேதி மத்திய அரசு எடுக்கவுள்ள முடிவைப் பின்பற்றி மாநில அரசு முடிவு எடுத்து அமல்படுத்தும். அரசின் முடிவுகளுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.

ஜிப்மரில் பணியாற்றுபவர்கள் அண்டை மாநிலமான தமிழகத்தில் இருந்து வருகின்றனர். இதனால் ஜிப்மரிலேயே குடியிருப்பு வசதி செய்து தரும்படி ஜிப்மர் இயக்குநரிடம் வலியுறுத்தியுள்ளோம். மேலும் இது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுத உள்ளார்".

இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

கரோனா தொற்று இல்லை என ஜிப்மர் மருத்துவமனையால் திருப்பி அனுப்பப்பட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த நபருக்கு, புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in