

பிறருக்கு கவலையை ஏற்பத்திடும் வகையில் தளர்வுகளை பயன்படுத்திடக்கூடாது என, அமைச்சர் ஆர்பி. உதயகுமார் எச்சரிக்கை விடுத்தார்.
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கரோனா தடுப்பு சிறப்புக் கட்டுப்பாட்டு அறையை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் இன்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது:
மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கேற்ப தமிழகத்தில் சிவப்பு, ஆரஞ்ச், பச்சை மண்டலத்திற்கான சில தளர்வுகளை முதல்வர் அறிவித்துள்ளார். தடுப்புப் பணியால் குணமடைந்தோர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், சிறப்புக்குழுக்களுடன் ஆலோசித்த பிறகே முதல்வர் முடிவுகளை எடுக்கிறார்.
ஜூனிலும் இலவச ரேசன் பொருட்களை வழங்கப் படும். தற்போது அறிவித்த பலவித தளர்வுகளும் சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா என, ஆட்சியர்களுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது. ஆட்சியர்களும் தளர்வுகள் குறித்து தெளிவுப்படுத்தியுள்ளனர். அந்தந்த மாவட்டத்தில் தொழிற்சாலைகளை வகைப்படுத்தி அவற்றின் செயல்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைக்கென தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி தளர்வுகளை பயன்படுத்தக் கூடாது. விழிப்புணர்வுடன் கையாளவேண்டும். கரோனவை தடுக்க, இன்னும் அதிக காலத்திற்கு விழிப்புணர்வு தேவை விழிப்பணர்வு மட்டுமே முழு பாதுகாப்பு. சமூக விலகல் போன்ற விதிகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும். இந்த ஊரடங்கின் போது, பிறருக்கு கவலையை ஏற்படுத்தும் வகையில் தளர்வுகளை பயன்படுத்திடக்கூடாது.
மதுரை சிவப்பு மண்டலத்தில் இருப்பதால் கூடுதல் கவனத்துடன் தளர்வுகளை கையாளுங்கள். வாகன கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளன.
குறிப்பிட்ட சதவீதத்தினர் ஒத்துழைக்கவில்லை என்பதற்காக மற்றவர்களை குறைகூறிட முடியாது. தளர்வுகளை சரியாக கையாண்டு நோய் தொற்றை தடுக்கவேண்டும்.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியே தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுக்கு உட்பட்டு மதுபான கடைகள் திறக்கலாம் என, மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கேற்ப திறக்கப்படுகின்றன. மது அருந்த எல்லையோர மாநிலங்களுக்கு மக்கள் செல்வதை தடுக்க, தீர ஆராய்ந்த பிறகே இந்த முடிவை முதல்வர் எடுத்துள்ளார். திறக்கப்படும் கடைகளுக்கு நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
28 நாளுக்கு பின், கட்டுப்பாடு பகுதி நீக்கப்படுகிறது. கரோனா தடுப்பு குறித்த ஒவ்வொரு முடிவு, நடவடிக்கையிலும், எவ்விதத்திலும் மக்கள் பாதிக்கக்கூடாது என்பதில் முதல்வர் மிக கவனமாக செயல்படுகிறார். முடக்கப்பட்ட பகுதியிலுள்ள மக்க ளுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கட்டுபாடு பகுதியினருக்கு வீட்டுகே சென்று ரேசன் பொருட்கள் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.