

தமிழக அரசின் தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 73 லட்சம் உறுப்பினர்களில், புதுப்பிக்கவில்லை என்ற காரணத்தால், 46 லட்சம் தொழிலாளர்கள் கரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்களைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் கட்டிடத் தொழிலாளர், விசைத்தறி, கைத்தறி, தையல் தொழிலாளர், அமைப்பு சாரா தொழிலாளர், பனை மரத் தொழிலாளர், முடி திருத்துவோர், சலவைத் தொழிலாளர், உடல் உழைப்புத் தொழிலாளர், பொற்கொல்லர், சாலையோர வணிகர்கள், சமையல் கலைஞர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் என 17 தொழிலாளர் நலவாரியங்கள் உள்ளன. இவற்றில் கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் மற்றும் ஆட்டோ தொழிலாளர் நல வாரியம் ஆகிய இரு வாரியங்கள் மட்டும் சுய நிதியைக் கொண்டு இயங்கி வருகின்றன. தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகள் நலவாரியத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் நடைபெறும் கட்டுமானங்களின் மீது ஒரு சதவீத நல வரி விதிக்கப்பட்டு, அந்தத் தொகை கட்டுமான நலவாரியத்திற்குச் சென்று சேர்கிறது. தற்போதைய நிலையில் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் 31 லட்சத்து 17 ஆயிரம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இதேபோல் போக்குவரத்துத் துறையின் பரிசோதனை உள்ளிட்ட கட்டணங்களின்போது பெறப்படும் நல வரியைக் கொண்டு ஆட்டோ தொழிலாளர் நல வாரியம் இயங்கி வருகிறது. இந்த வாரியத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த இரு நல வாரியங்களைத் தவிர மற்ற வாரியங்களுக்கு சுயநிதி ஆதாரம் இல்லாத நிலையில், அரசு நிதி அளித்தால் மட்டுமே நலத்திட்ட உதவிகளை வழங்க முடியும் என்ற நிலை உள்ளது. இந்த வாரியங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து குறிப்பிட்ட தொகையை நிரந்தரமாக ஒதுக்கீடு செய்ய வேண்டுமென தொழிற்சங்கங்கள் வற்புறுத்தி வருகின்றன.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவிடும் வகையில் கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் மற்றும் ஆட்டோ தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 12.13 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.ஆயிரம் வீதம் இரு முறையும், 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மீதமுள்ள 15 வாரியங்களைச் சேர்ந்த 14 லட்சம் பேருக்கு தலா ரூ.1000 என ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகை மட்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நலவாரியங்களில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வந்தவர்களுக்கு மட்டுமே இந்த நிவாரணத் தொகை மற்றும் பொருட்கள் கிடைக்கும் என்பதால் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்குப் பலன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி கூறுகையில், ''தமிழக அரசின் நலவாரியங்களில் 94 சதவீதம் பேர் அமைப்புசாரா தொழிலாளர்களே இடம்பெற்றுள்ளனர். ஊரடங்கு உத்தரால் இவர்கள் அனைவருமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் 3000 கோடி வரை நிதி இருந்தும், வாரியத்தில் பதிவு செய்த 19 லட்சம் பேருக்குப் புதுப்பிக்கவில்லை என்ற காரணம் கூறி நிவாரணம் வழங்கப்படவில்லை. புதுப்பித்தல் இல்லையென்றால், மற்ற உதவிகளை நிறுத்தினாலும், கரோனா பாதிப்பு நிவாரணத்தை அரசு அனைவருக்கும் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 17 நலவாரியங்களில் 73 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 27 லட்சம் பேருக்கு மட்டுமே தற்போது கரோனா நிவாரணம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் நல வாரியங்களில் பதிவு செய்தும், புதுப்பிக்கவில்லை என்ற ஒரு காரணத்திற்காக 46 லட்சம் தொழிலாளர்கள் நிவாரணத் தொகை மற்றும் நிவாரணப் பொருட்களைப் பெற முடியாமல் உள்ளனர்.
புலம்பெயர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களில் 24 ஆயிரம் மட்டுமே பதிவில் உள்ளனர். பதிவு செய்யாவிட்டாலும், அரசின் பதிவுக் கணக்கில் 40 ஆயிரம் இதர தொழிலாளர் உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நிவாரணத் தொகை மறுக்கப்பட்டு, நிவாரணப் பொருட்கள் மட்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
நலவாரியங்களில் புதுப்பித்தவர்கள் வங்கிக் கணக்கு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, பலரும் வங்கிக் கணக்கை அளித்து வருகின்றனர். அதனைப் பதிவேற்றம் செய்யும் பணியில் தாமதம் தொடர்வதாலும், அரசு நிதி ஒதுக்கீடு தாமதமாவதாலும், தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை சென்று சேர்வதில் தாமதம் தொடர்கிறது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் எம்.முருகேசன் கூறுகையில், ''நல வாரிய உறுப்பினர் பதிவை தொழிற்சங்கங்கள் புதுப்பித்துக் கொடுக்கும் முறை 2013-ம் ஆண்டு நிறுத்தப்பட்டதால், தொழிலாளர்கள் பலரும் புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பணிக்கென வேலைக்கு விடுமுறை கேட்டு இரண்டு, மூன்று நாட்கள் கூலியைத் தொழிலாளர்கள் இழக்க முடியாததே அதற்கு காரணம். தற்போது ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதுமானது என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
நலவாரியங்களின் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்க ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட கண்காணிப்புக் குழு மாவட்டம்தோறும் உள்ளது. இதுபோன்ற காலங்களில் அந்தக் குழுவினைக் கூட்டி, தொழிற்சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டு, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் சென்று சேர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.