

மத்திய அரசு இரண்டாவது முறையாக அனைத்து மாநிலங்களுக்கும் பொருளாதார உதவியைச் செய்ய வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (மே 2) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரியில் 3 பேரும், மாஹே பிராந்தியத்தில் ஒருவரும் என 4 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக இருக்கும் முத்தியால்பேட்டை, ரெட்டியார்பாளையம் பகுதிகளில் வசிக்கும் சுமார் 207 பேருக்கு நேற்று உமிழ் நீர் பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. அதேபோல் புதுச்சேரியின் பல பகுதிகளில் உள்ள 42 பேருக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கும் கரோனா தொற்று இல்லை.
வெளிமாநிலத்துக்குப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் சொந்த மாநிலத்துக்குத் திரும்பி வர, தங்கியுள்ள மாநிலத்தின் அனுமதியோடு அவர்களை அழைத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்கள் வாகனங்களில் செல்லலாம் எனவும் கூறியுள்ளது. வாகனங்களில் வருவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.
ஆகவே, பிரமருக்குக் கடிதம் எழுதி ரயில் சேவையைத் தொடங்க வேண்டும். அதில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து வர வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவித்தேன். அதற்கான நிதியை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தவு வந்துள்ளது.
மாநில அரசுகள் எப்படி நிதி அனுப்புவது என்ற குழப்பங்கள் உள்ளன. ஆகவே, ரயில் பயணத்தில் கட்டணம் இன்றி செல்ல வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். அதற்கு பிரதமர் செவிசாய்ப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனா எதிர்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்,செவிலியர்கள், காவல்துறையினருக்கு எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுளேன். வரும் திங்கள்கிழமை முதல் மாத்திரைகள் அவர்களுக்கு வழங்கப்படும். மத்திய அரசு 3-வது முறையாக ஊரடங்கை சில தளர்வுகளோடு நீட்டித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் திறப்பது குறித்து நாளை (மே 3) அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுத்து அறிவிக்கப்படும். புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.7 கோடிக்கு மேல் வந்துள்ளது. மருத்துவ உபகரணங்கள் வாங்க இந்த நிதி போதாது.
எனவே, பொதுமக்கள் முன்வந்து நிதி அளிக்க வேண்டும். ஊரடங்கு காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி வீதம் 3 மாதங்களுக்கு 15 கிலோ அரிசி கொடுத்ததோடு சரி, நிதி ஆதாரம் எதுவும் மத்திய அரசு கொடுக்கவில்லை.
பட்ஜெட்டில் கொடுக்க வேண்டிய நிதி நான்கில் ஒரு பங்கை முறையாக ஒவ்வொரு ஆண்டும் எங்களுக்குக் கொடுக்க வேண்டியது. இதற்கும் கரோனாவுக்கும் சம்பந்தமில்லை. ஆனாலும், எங்களுடைய வருவாயை வைத்துப் பல திட்டங்களை அறிவித்து நிறைவேற்றி வருகிறோம். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். மஞ்சள் அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்குவதற்கான கோப்புகளைத் தயாரித்து வருகிறோம்.
புதுச்சேரியின் நிதி ஆதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டிருப்பதால் மாநிலத்துக்கு வருவாய் இல்லை. ஊரடங்கால் ஒன்றரை மாதங்களாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாழ்வாதாரம் இல்லை.
மாநில அரசு நிதிப் பற்றாக்குறையால் அவர்களுக்கு உதவுவது சிரமமாக உள்ளது. மத்திய அரசிடம் நிதி இருக்கிறது. எனவே மீண்டும் ஒரு முறை இலவச அரிசி மற்றும் பணம் தர வேண்டும். மத்திய அரசு இரண்டாவது முறையாக பொருளாதார உதவியை அனைத்து மாநிலங்களுக்கும் செய்ய வேண்டும்"
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.