

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று முதியவர் ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு இல்லாத ஒரே மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்து வந்த நிலையில் இன்று 67 வயது முதியவர் ஒருவருக்குக் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியில் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 67 வயது முதியவர், ஆந்திர மாநிலத்தில் புகழ் பெற்ற கோயில் ஒன்றில் 2 மாதங்களாகத் தங்கியிருந்தார்.
இந்நிலையில், கடந்த 25-ம் தேதி கிருஷ்ணகிரி நகர் பகுதியைச் சேர்ந்த 2 பெண்கள், ஒரு ஆண் மற்றும் காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஆகியோர் முதியவரை காரில் அழைத்துக் கொண்டு சென்று அவரது கிராமத்தில் விட்டுள்ளனர்.
இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர் ஆகியோர், முதியவர் உட்பட 5 பேரைத் தனிமைப்படுத்தினர். மேலும், 5 பேருக்கும் கரோனா வைரஸ் குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ள சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
இதனிடையே, 67 வயது முதியவருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று (மே 1) இரவு தெரியவந்ததால், முதியவரை மருத்துவக்குழுவினர் மீட்டு சேலம் அரசு மருத்துவனையில் சிகிச்சைகாகச் சேர்த்துள்ளனர்.
மேலும், முதியவருடன் சென்ற 4 பேர் வசிக்கும், கிருஷ்ணகிரி பழையபேட்டை, நல்லதம்பிச் செட்டியார் தெரு, பாலாஜிநகர், காவேரிப்பட்டணம் சண்முக செட்டித் தெரு ஆகிய பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேபோல் முதியவர் வசித்த கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டும், முதியவருடன் இருந்த உறவினர்கள் 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டும், கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கரோனா தொற்று ஏற்பட்டுள்ள முதியவர் ஊரடங்கு உத்தரவை மீறி அனுமதியின்றி மாவட்டத்திற்குள் வந்ததாகத் தகவல் பரவியது. இதனைத் தொடந்து 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. ஆனால், விசாரணையில் உரிய அனுமதி பெற்று அவா்கள் வந்தது தெரியவந்ததால், வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று இல்லாத ஒரே மாவட்டமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று முதியவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் பச்சை நிற மண்டலமாக இருந்த அந்த மாவட்டம், ஆரஞ்சு மண்டலமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.