

ஊரடங்கு நேரத்தில் கிராமப்புற மக்களுக்கு உதவும் வகையில், 13 நடமாடும் மருத்துவப் பரிசோதனை குழுக்களுக்கான வாகனங்களை திருமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆட்சியர் டிஜி. வினய், சுகாதார துணைஇயக்குநர் பிரியா, டீன் சங்குமணி பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:
மதுரை மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளின் தொடர்ச்சியாக தாய், சேய் நலம்மற்றும் தொற்று நோய் சிறப்பு மருத்துவக்குழு மூலம் அந்தந்த கிராம மக்களின் வீடுகளுக்கே சென்று கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை, தொற்று அறிகுறி கண்டறிதல், சிகிச்சை பெறுபவர்களுக்குமருந்துகள் வழங்கப்படும்.
இக் குழுக்களில் மருத்துவர், செவிலியர், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள், பகுதி நேர பணியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். மாவட்டத்திலுள்ள 13 வட்டாரத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் 13 நடமாடும் மருத்துவக்குழுக்கள் செயல்படுத்தப்படும்.
இத்திட்டம் மூலம் 5,931 கர்ப்பிணிகள், 1,265 கண்காணிப்பு தேவைப்படும் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பிரசவகால முன் சோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு அறிவுரை, சத்து மாத்திரைகள் வழங்கப்படும்.
மேலும், தீவிர கண்காணிப்பு தேவைப்படும் தாய்மார்களை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவர்.
மேலும், மாவட்டத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் 22,704 உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கும், 14,642 சர்க்கரை நோயாளிகளுக் கும் அவர்களின் வீட்டில் அருகேமாத்திரைகள் கிடைக்கச் செய்வது, கிருமி நாசினி தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.