

புதுச்சேரியில் கரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவிகள் மற்றும் பணியாளர்களுக்குக் கல்லூரியின் முன்னாள் மாணவிகள் அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கி உதவினர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 5,000க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். 120 பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளன.
இச்சூழ்நிலையில், புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவிகள் சங்கம் இணைந்து கரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த ஏழை மாணவிகள், கல்லூரி காவலாளிகள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
இதன் தொடக்க நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் இன்று (ஏப் 29) நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுப்பிரமணி, முன்னாள் மாணவிகள் சங்கத் தலைவர் ரஜினி சனோலியன் மற்றும் அனைத்துத் துறை தலைவர்களும் கலந்துகொண்டு, மாணவிகள், காவலாளிகள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் சர்க்கரை, எண்ணெய், துவரம் பருப்பு, புளி, மிளகாய், டெட்டால் சோப்பு, முகக்கவசம் உள்ளிட்டவை அடங்கிய மளிகைப் பொருட்கள் தொகுப்பை வழங்கினர்.
200 ஏழை மாணவிகள் மற்றும் 25 பணியாளர்களுக்கு இந்தப் பொருட்கள் வழங்கப்பட்டன. அதோடு கல்லூரியில் பணியாற்றும் 32 தொகுப்பூதிய விரிவுரையாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கவும் கல்லூரியின் முன்னாள் மாணவிகள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும், கல்லூரியில் உள்ள நலம் ஹெல்த் கிளப் சார்பில் கபசுரக் குடிநீர் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இதுகுறித்து முன்னாள் மாணவிகள் சங்கத் தலைவர் ரஜினி சனோலியன் கூறும்போது, "கரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, ஏழை மாணவர்களுக்கு எங்களால் முடிந்த உதவியைச் செய்ய முன்வந்தோம். இதற்காக எங்கள் சங்கமும், கல்லூரி நிர்வாகமும் இணைந்து கல்லூரியில் உள்ள ஒவ்வொரு துறையின் தலைவர்கள் மூலம் 200 ஏழை மாணவர்களைக் கண்டறிந்தோம்.
அவர்களுக்கும், கல்லூரியில் வேலை பார்க்கும் 25 பணியாளர்களுக்கும் ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, மளிகைத் தொகுப்பு வழங்கினோம். மேலும், கல்லூரியில் பணிபுரியும் தொகுப்பூதியம் பெறும் விரிவுரையாளர்கள் ஊதியமின்றித் தவித்து வருகின்றனர். அவர்களில் 32 பேரின் வங்கிக் கணக்கில் ரூ.2 ஆயிரம் செலுத்தியுள்ளோம். ஏழ்மையில் இருப்பவர்கள் பசியோடு இருக்கக்கூடாது என்பது தான் எங்களின் எண்ணம். எனவே தொடர்ந்து இப்பணியை மேற்கொள்வோம்" என்றார்.