

குன்றக்குடி கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு கரோனா நிவாரண உதவிகளை குன்றக்குடி ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கடந்த இரண்டு நாட்களாக வழங்கி வருகிறார்.
குன்றக்குடி பகுதியில் கரோனா தடுப்புப் பணிகளை அக்கறையுடன் கவனித்துவரும் பொன்னம்பல அடிகளார், கிராமம் முழுமைக்கும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் தன்னையும் இணைத்துக் கொண்டார். அத்துடன், குன்றக்குடி மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக கடந்த 15 நாட்களாக கிராமத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கபசுரக் குடிநீர் விநியோகிக்கும் பணிகள் குன்றக்குடி ஆதீனத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, அடிகளாரின் வழிகாட்டல்படி குன்றக்குடி ஆதீன மடத்தில் தினமும் 100 பேருக்கு மதிய உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக, கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்கட்டமாக பிரதமர் நிவாரண நிதிக்கும், தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரனிடம் குன்றக்குடி அடிகளார் வழங்கினார். இதைத் தொடர்ந்து, குன்றக்குடி கிராமத்தில் பணியாற்றும் 20 தூய்மைப் பணியாளர்களுக்கும் தலா 1000 ரூபாய் நிவாரணத் தொகையையும் தலா 10 கிலோ அரிசியையும் வழங்கினார்.
இந்த நிலையில், நேற்றும் இன்றும், குன்றக்குடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண உதவிகளை பொன்னம்பல அடிகளார் வழங்கி வருகிறார். அதன்படி முதல்கட்டமாக, குன்றக்குடி கிராமத்தைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கும், முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கும் அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 1,200 பேருக்கு சுமார் 7 லட்ச ரூபாய் செலவிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் குன்றக்குடி மக்களுக்கு மேலும் நிவாரண உதவிகள் தொடரும் எனவும் அடிகளார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.