

ஊரடங்கு காலத்தில் மக்களுக்குத் தடையின்றி உதவ நடமாடும் ஏடிஎம் சேவையை பாரதியார் கிராம வங்கி ஏற்பாடு செய்துள்ளது. இதனை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று தொடங்கி வைத்தார்.
கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு ஒடுங்கி வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் புதுச்சேரி மக்களுக்குத் தங்கு தடையின்றி உதவ புதுச்சேரி பாரதியார் கிராம வங்கி முன்வந்துள்ளது.
வீடு, வீடாக வங்கி பரிவர்த்தனை வழங்கும் பொருட்டு, புதுச்சேரியில் முதன்முறையாக நடமாடும் ஏடிஎம் சேவையைத் தொடங்கியுள்ளது. இதனை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் இன்று (ஏப் 28) கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
பாரதியார் கிராம வங்கி தலைவர் மார்க்கரேட் லெடிஷியா, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் வீரராகவன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அதிகாரி உமா குருமூர்த்தி, பாரதியார் கிராம வங்கி பொது மேலாளர் மோகன் குமார், புதுச்சேரி பாரதியார் கிராம வங்கி பிரதான கிளை மேலாளர் பிரியதர்ஷினி மற்றும் வங்கியின் பிற அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறும்போது, "புதுச்சேரி பாரதியார் கிராம வங்கியானது புதுச்சேரியில் 43 கிளைகளுடன் இயங்கி வருகிறது. வங்கியின் அனைத்துக் கிளைகளும் இந்த கரோனா ஊரடங்கு காலத்திலும் வாடிக்கையாளர்களுக்குத் தங்கு தடையின்றி அனைத்துச் சேவைகளையும் வழங்கி வருகிறது.
இந்த நடமாடும் ஏடிஎம் சேவை அனைத்து இடங்களுக்கும் குறிப்பாக வங்கிச் சேவை இல்லாத கிராமப்புற மக்களுக்கும் உதவும் பொருட்டு ஊர் ஊராக நகர்ந்து செல்லும். அனைத்து மக்களும் வங்கியின் இச்சேவையைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்து பயன்பெற முடியும்" எனத் தெரிவித்தனர்.