புதுச்சேரி மக்களுக்கு தரமற்ற அரிசி விநியோகம்; அரசு மீது அதிமுக குற்றச்சாட்டு 

அன்பழகன் எம்எல்ஏ .
அன்பழகன் எம்எல்ஏ .
Updated on
1 min read

புதுச்சேரி மாநில மக்களுக்கு தரமற்ற அரிசியை ஆளும் காங்கிரஸ் அரசு வழங்கி வருவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி மாநில அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் அன்பழகன் இன்று (ஏப் 28) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"புதுச்சேரியில் எவ்வித காரணமுமின்றி தொடர்ந்து துணைநிலை ஆளுநரின் ஒரு சில நியாயமான கருத்துகளைக் கூட ஆளும் காங்கிரஸ் அரசு எதிர்த்து வருவதால் மக்கள் அவ்வப்போது பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

மத்திய அரசு புதுச்சேரியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 1 லட்சத்து 78 ஆயிரம் குடும்பத்தினருக்கு நபர் ஒன்றுக்கு 5 கிலோ வீதம் 3 மாதத்துக்கு அரிசி மற்றும் பருப்பு வழங்க அறிவித்தது. இதற்காக 9,700 டன் அரிசி வழங்க முடிவெடுக்கப்பட்டது. நல்ல காரணங்களைக் கருத்தில் கொண்டு அரிசி, பருப்புக்குப் பதிலாக வங்கியில் நேரடியாக பணம் செலுத்தலாம் என்ற கருத்தினை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி அரசுக்கும், மத்திய அரசுக்கும் தெரிவித்திருந்தார்.

ஆனால், திமுக துணையோடு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசு அரிசிதான் போடுவோம் என்று கூறியது. தற்போது 9,700 டன் அரிசிக்கு ரூ.21 கோடியே 30 லட்சம் பணம் வழங்கியுள்ளது. இந்த அரிசியை விநியோகம் செய்ய மூன்றரை கோடி செலவு செய்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதுவரை அரிசி வழங்கும் விவகாரத்தில் சுமார் ரூ.25 கோடி செலவு செய்துள்ளனர்.

இதற்கு பதில் காங்கிரஸ் அரசு பணமாகக் கொடுக்க முடிவு எடுத்திருந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1,400 கொடுத்திருக்கலாம். ஆனால், அரிசி போடுகிறோம் என்ற பெயரில் மக்கள் சாப்பிடுவதற்கு உபயோகம் இல்லாத தரமற்ற அரிசியை வழங்கியுள்ளது. இந்த அரிசியை மக்கள் பயன்படுத்தாமல் தற்போது ரூ.10க்கு விற்கின்றனர்.

ஆளுநர் கிரண்பேடி கூறியபடி பணம் போட்டிருக்கலாம். தேவையில்லாமல் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தித் தற்போது பயன்படாத வகையில் உள்ளது. ஆளும் அரசு ஆளுநர் கிரண்பேடியை எதிர்ப்பது தவறல்ல. ஆனால், நியாயமான பிரச்சினையில் தலையிட்டு இருவரின் மலிவு விளம்பர 'போட்டா போட்டி'யால் மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை முதல்வர் ஏற்படுத்தியுள்ளார்.

அதிமுகவினர் போராட்டம் காரணமாக 1 லட்சத்து 60 ஆயிரம் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசியை வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. எனவே, இவர்களுக்கு அரிசிக்குப் பதில் பணம் வழங்கலாம். மக்களுக்கு உடனடியாக எது உபயோகப்படும் என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்"

இவ்வாறு அன்பழகன் தெரிவித்தார்.

பேட்டியின் போது அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் உடனிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in