

மதுரை நகரில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட எஸ்.ஐ, போக்குவரத்து காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று 2 நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றிய 58 வயதான தீயணைப்பு வீரர் ஒருவருக்கும் நேற்று நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து அந்த தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்த 13 வீரர்கள் உட்பட திடீர்நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், அலுவலர்கள் மற்றும் அருகிலுள்ள தீயணைப்பு வீரர்களுக்கான குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என, சுமார் 63 பேருக்கு நேற்று மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான முடிவு ஓரிரு நாளில் வர வாய்ப்பள்ளது. இதற்கிடையில் மீனாட்சியம்மன் கோயில் தீயணைப்பு நிலையம் இன்று மூடப்பட்டது.
அங்கு பணியில் இருந்த 13 வீரர்களுக்கு ஓய்வு அளித்து, தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை நகரில் கரோனா தொற்று பாதிப்பால் தெற்குவாசல் காவல் நிலையத்தைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோயில் தீயணைப்பு நிலையமும் மூடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.