பேராவூரணியில் தீ விபத்தில் வீட்டை இழந்த கூலித்தொழிலாளி: மீண்டும் வீடு கட்டித் தந்த அரசு மருத்துவருக்குக் குவியும் பாராட்டுகள்

தீ விபத்துக்குப் பின் அரசு மருத்துவர் சொந்த செலவில் கட்டிக் கொடுத்த குடிசை வீட்டில் சத்யா குடும்பத்தினர்.
தீ விபத்துக்குப் பின் அரசு மருத்துவர் சொந்த செலவில் கட்டிக் கொடுத்த குடிசை வீட்டில் சத்யா குடும்பத்தினர்.
Updated on
1 min read

பேராவூரணி அருகே தீ விபத்தில் வீட்டை இழந்த மாற்றுத்திறனாளி குழந்தையுடன் தவித்த கூலித்தொழிலாளிக்கு, புதிதாக குடிசை வீட்டைக் கட்டிக் கொடுத்த அரசு மருத்துவரை, அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த செங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா (31). இவரது மனைவி ராஜேஸ்வரி (24). கூலித் தொழிலாளியான இவர்களுக்கு, பிரசாந்த் (10), பவித்ரா (9), மாற்றுத்திறனாளியான பிரகாஷ் (8) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் வேலையில்லாமல் உணவுக்கே தவித்து வருகின்றனர். கடந்த 21-ம் தேதி சத்யாவும், ராஜேஸ்வரியும் அருகில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது, அவர்களின் குடிசை வீடு, திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த மாற்றுத்திறனாளி குழந்தை உள்பட மூன்று குழந்தைகளையும் மீட்டதோடு தீயை அணைத்தனர். இவ்விபத்தில், வீடு உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் எரிந்து நாசமாகின.

இதையறிந்து, மறுநாள் பேராவூரணி வட்டாட்சியர் ஜெயலெட்சுமி, செங்கமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வம், அதிமுக ஒன்றியச் செயலாளர் துரைமாணிக்கம் ஆகியோர் நிவாரண உதவிகளை வழங்கினர்.

இந்நிலையில், செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சவுந்தரராஜன், அந்தக் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு, மூன்று நாளில் புதிதாக குடிசை வீடு ஒன்றை தனது சொந்தச் செலவில் கட்டிக்கொடுத்தார். மேலும், குடும்பத்தினருக்குத் தேவையான உடைகள், பாத்திரங்கள், உணவுப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

அதைப் பெற்றுக்கொண்ட தம்பதியர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். உடனடியாக பால் காய்ச்சி வீட்டில் குடி புகுந்தனர். மருத்துவரின் செயலை கிராமத்தினர் பாராட்டினர்.

இது குறித்து சத்யா கூறுகையில், "வீடு தீப்பிடித்து எரிந்த நிலையில், அருகில் இருந்த மரத்தின் நிழலில் பிளக்ஸ் ஒன்றை விரித்து, வசித்து வந்தோம். இதைப் பார்த்த மருத்துவர் எங்களுக்கு வீடு கட்டிக்கொடுத்துள்ளார். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in