

நிவாரணமாக ரூ.10,000 வழங்க வலியுறுத்தி சிவகங்கை மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பலர் வேலையின்றி உணவிற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இதையடுத்து விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக ரூ.10,000 வழங்க வேண்டும்.
கரோனா தடுப்புக்காக தமிழகம் கேட்ட ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களை விவசாயப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சிவகங்கை மாவட்டத்தில் கண்டரமாணிக்கம், குருந்தம்பட்டு, கல்லல், லாடனேந்தல், பனிக்கனேந்தல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1,500 வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜெயராமன், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் வீரபாண்டி வழிநடத்தினர்.