ஓடிசாவில் மாவோயிஸ்ட் தாக்குதலில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பிஎஸ்எப் வீரர் உயிரிழப்பு

ஓடிசாவில் மாவோயிஸ்ட் தாக்குதலில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பிஎஸ்எப் வீரர் உயிரிழப்பு
Updated on
2 min read

ஒடிசாவில் நடந்த மாவோயிஸ்டு தாக்குதலில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த நெடுங்கல் அருகே உள்ள திம்மேநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(44).

இவர் எல்லை பாதுகாப்புப் படையின் 104வது படைப்பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஒரிசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டம் ஜன்பாய் முகாமில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு எல்லைபாதுகாப்பு படைவீரர்கள் படகில் சித்ரகொண்டா ஏரியை தாண்டி சிந்தம் டோலி பள்ளத்தாக்கு பகுதியை அடைந்தனர்.

பின்னர் அங்கிருந்து குருப்பிரியா பால கட்டுமானப்பணி நடக்கும் இடம் அருகே சென்ற போது நேற்று காலை சுமார் 7.30 மணிக்கு கண்ணிவெடி வெடித்துள்ளது. இந்த கண்ணிவெடித் தாக்குதலுக்கு பிறகு அங்கே மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள் எல்லை பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதையடுத்து எல்லை பாதுகாப்பு படையினரும் மாவோஸ்டுகளை நோக்கி எதிர்தாக்குதல் நடத்தியுள்ளனர். இரு தரப்பினருக்குமிடையே நடந்த இந்த தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 3 வீரர்கள், பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் பலியான ரவிச்சந்திரன், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த நெடுங்கல் அருகே உள்ள திம்மேநத்தம் கிராமத்தை சேர்ந்த மன்னார்& குப்பம்மாள் தம்பதியின் முத்த மகனாகும். இவர் கடந்த 1973ம் ஆண்டு பிறந்து,

பிளஸ்-2 வரை படித்து உள்ளார். கடந்த 1993ம் எல்லை பாதுகாப்பு படையில் சேர்ந்தார். இவருக்கு யசோதா(35) என்ற மனைவியும், பூஜா(16), ரூபாவதி(14) என இரு மகள்களும், ஜெயச்சந்திரன்(9) என்ற மகனும் உள்ளனர்.

இவரது உடன் பிறந்த 5 பேர், இதில் சிவசண்முகம் என்பவரும் எல்லைப் பாதுகாப்பு படையில் தற்போது ஒரிசாவில் பணிபுரிந்து வருகிறார். மற்றவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

ரவிச்சந்திரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 15 நாட்கள் விடுமுறையில் வந்து சென்றுள்ளார். அவர் உயிரிழந்த குறித்த தகவல் நேற்று காலை அவரது குடும்பத்தினருக்கு தெரிந்தது.

தகவலறிந்ததும் திம்நத்தம் கிராமமே சோகத்தில மூழ்கியது. வீட்டில் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் மணிவண்ணனிடம் கேட்டபோது, இறந்த ரவிச்சந்திரன் உடல் இன்று மாலை 5.45 மணிக்கு பெங்களூருக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து திம்மேநத்தம் கிராமத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதனை தொடர்ந்து ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிவித்தார்.

கண்ணிவெடி சோதனை

மாவோயிஸ்டுகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ரவிச்சந்திரன், மற்ற வீரர்களுடன் சேர்ந்த அங்கு மாலை நேரத்தில் மூடப்படும் சாலையை திறந்து கண்ணிவெடி எங்காவது புதைத்து வைத்துள்ளார்களா? என ஆய்வு செய்யும் பணியில் ஈடுபவர்.

அவ்வாறு கண்ணி வெடி சோதனை முடிந்த பின்பு தான் பொதுமக்களை அந்த சாலையில் செல்ல அனுமதிப்பர். அதன்படி தான் நேற்று அந்த சாலையை சோதனை செய்ய செல்லும் போது இந்த தாக்குதல் நடந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in