

ஆளுநர் கிரண்பேடியின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு விடிவுகாலம் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று(ஏப் 24) மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றால் 3 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் கரோனா தொற்று பாதிப்பு இல்லை. சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைப்பால் கரோனா தொற்று பரவுவதைத் தடுத்து நிறுத்தியுள்ளோம்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலேயும் தொடர்ந்து 15 நாட்கள் புதிதாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்ற நிலையை புதுச்சேரி மாநிலத்தில் நாம் உருவாக்கி இருக்கிறோம். சுகாதாரத்துறை, காவல்துறையினர் இரவு, பகலாகப் பாடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டுமென மருத்துவத்துறை தலைமை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டு அடுத்த வாரம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து எங்கள் அரசுக்குத் தொல்லை கொடுப்பது மட்டுமல்லாமல், அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார்.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு எங்கள் அரசு சார்பில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து அதில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் இந்நேரத்தில் அரசுக்குக் களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதற்காக அவர் பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார்.
அதன் முதற்கட்டமாகத்தான் கிரண்பேடி அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவுகளைக் கொடுத்து, அதிகாரிகளையும் தேவையின்றி நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் அளவில் மாற்றி அவர்களுக்குச் சங்கடத்தை உருவாக்கி வருகிறார். இதனால் அதிகாரிகள் மன உளைச்சலுடன் செயல்படுகின்றனர். கீழ்நிலை அதிகாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை அதிகாரிகள் இரவு பகலாகப் பணியாற்றுகின்றனர். ஆனால் ஒருசிலர் அவர்களை வசை பாடுவதும், குற்றச்சாட்டு கூறுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. ஆகவே அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளேன்.
அதேபோல் குடிமைப்பொருள் துறை, கலால்துறை போன்ற பல துறைகளில் உள்ள அதிகாரிகள் கிரண்பேடியின் அராஜகப்போக்கினால், சட்டவிரோதப் போக்கினால், அதிகார துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் விடிவுகாலம் கொண்டுவர நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
அரசின் அன்றாடச் செயல்பாடுகளில் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. அரசு நிர்வாகத்தை முதல்வர், அமைச்சர்கள் நடத்துவார்கள் என்று தெள்ளத்தெளிவாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு இருந்தும், துணைநிலை ஆளுநரின் நடவடிக்கைகள் நீதிமன்றத்தை அவமதிக்கின்ற வகையில் இருக்கிறது. அதற்காக மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.
புதுச்சேரியில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். பொருட்கள் வாங்குபவர்கள் 3 நாட்களுக்கு ஒருமுறை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும் என்று பல முறை நான் வலியுறுத்திக் கூறியும், அதனைப் பொருட்படுத்தாமல் சிலர் அரசு உத்தரவை மீறி வருகின்றனர். இதனால் கரோனா பாதிப்பு வந்துவிடுமோ என்ற எண்ணம் எங்கள் மத்தியில் இருக்கிறது.
அதற்காகத்தான் புதுச்சேரியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரண்டு நாட்கள் பார்ப்போம். மக்கள் அதிக அளவில் வெளியே நடமாடினால் கடைகளை ஒருநாள் திறந்து இரண்டு நாட்கள் மூடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் கூறியிருந்தேன். இப்போது அதனைத் தமிழகத்தில் கடைப்பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் 3 நாட்கள் அனைத்துக் கடைகளும் மூடப்படுகின்றன. தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து 2 நாட்கள் கடைகளை மூடி மூன்றாவது நாள் திறக்கின்ற முடிவை எடுத்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் இதே நிலை நீடித்தால் கண்டிப்பாக அதனை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையை எடுப்போம். ஆகவே, இந்த நடவடிக்கையை எடுக்க எங்களை நிர்பந்திக்காதீர்கள்''.
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.