

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் க்யூ ஆர் கோடு கொண்ட வாகன அனுமதிச்சீட்டு பெறுவதற்கு இன்று கூடிய பெரும் கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சமூக விலகலை துட்சமென நினைத்து மக்கள் திரண்டதால் ஆட்சியர் பழைய நிலையே நீடிக்கும் என உத்தரவிட்டார்.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட நிர்வாகம், நகர் காவல்துறை, மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இருப்பினும், அத்தியாவசியத் தேவைக்கு செல்வதாகக் கூறி, பலர் வாகனங்களில் சுற்றுவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வைரஸ் தொற்றின் வேகம் தீவிரத்தைக் கருத்தில் கொண்டும், சமூக பரவலராக மாறிடக்கூடாது, முறைகேடாக செல்லும் வானகங்களை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து அதிரடி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டது.
இதன்படி, அத்தியவாசிய தேவை என்ற பெயரில் முறையான அனுமதிச்சீட்டு, பாஸ் இன்றி வெளியில் வரும் இருசக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்க மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையைத் தொடர்ந்து காவல் துறை இந்த நடவடிக்கையை இன்று முதலே அமல்படுத்த தொடங்கியது.
இதற்கிடையில் ஏற்கெனவே அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்கின்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படும் கியூஆர் கோடு கொண்ட அடையாள அட்டைகளைப் பெற வேண்டும். அந்த அட்டையை பெறுவதற்கு இன்று(ஏப்.25) ஒரு நாள் மட்டுமே அவகாசம் என்பதால் அத்தியாவசியத் தேவைக்கான வாகன உரிமையாளர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் என, ஏராளமானோர் காலை முதல் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திரண்டனர்.
இதனால் மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் சூழல் உருவானது. அலுவலக கேட்களை மூடும் சூழல் ஏற்பட்டது. கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கண்டு என்ன செய்வது எனத் தெரியாது அதிகாரிகள் திகைத்தனர். யாருக்கும் அடையாள அட்டை வழங்க முடியாத சூழல் உருவானது. இதற்கிடையே க்யூ ஆர் கோடு அடையாள அட்டை முறை தவிர்க்கப்படும். பழைய நடைமுறையே தொடரும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு கூடி இருந்த மக்கள் கலைந்து சென்றனர்.
மக்கள் கூறுகையில், ‘‘ மதுரை நகரில் கரோனா தடுக்க, தேவையற்ற வாகனங்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த புதிய நடைமுறையை அமல்படுத்த மாவட்ட நிர்வாகம், காவல்துறை க்யூஆர் கோடு அடையாள அட்டைகளை விநியோகிக்க திட்டமிட்டது வரவேற்கத்தக்கது.
இருந்தாலும், அதற்கு தகுத்த ஏற்பாட்டை செய்திருக்கவேண்டும். ஒரே நாளில் பெறவேண்டும் என்பதால் மக்கள், பத்திரிகையாளர்கள் திரண்டனர்.
சமூக விலகல் அவசியம் என, அறிவுறுத்தும் அதிகாரிகள், இது போன்ற அடையாள அட்டைகளை வழங்க உரிய அவகாசம் கொடுத்து அறிவித்து இருக்கவேண்டும். திடீரென அறிவித்த்தால் இச்சூழல் உருவானது,’’ என்றனர்.