

ஊரடங்கு நேரத்தில் போலீஸாருக்கு குறிப்பிட்ட நாட்கள் ஓய்வளிக்கும் புதிய திட்டம் மதுரையில் நடைமுறைக்கு வந்தது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, நாடு முழுவதும் பிறபிக்கப் ட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியத் தேவையைத் தவிர, தேவையின்றி வெளியில் மக்கள் வருவதை போலீஸார் கண்காணித்து நட வடிக்கை எடுக்கின்றனர். கரோனா தடுப்பு நடவடிக்கையில் போலீஸார், சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட அரசின் பிற துறையினரும் இரவு, பகல் இன்றி தங்களது குடும்பங்களை மறந்து பணிபுரிகின்றனர்.
இவர்களின் குடும்ப நலன் கருதி சுகாதாரம், காவல்துறையில் எண்ணிக்கை அடிப்படையில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு அளிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, காவல்துறையிலும் ஒவ்வொரு மாவட்டம், மாநகராட்சிப் பகுதியில் மொத்த போலீஸார் எண்ணிக்கை அடிப்படையில் ஏபிசி என, மூன்றாகப் பிரித்து, ஒரு பகுதியினருக்கு குறிப்பிட்ட நாட்கள் விடுப்பு அளிக்க, டிஜிபி திரிபாதி சமீபத்தில் உத்தரவிட்டார்.
மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அந்தந்த காவல் நிலைய எண்ணிக்கையில் மூன்றாக பிரித்து, நாள் ஒன்றுக்கு 8 மணி நேர பணி வழங்கப்பட்டது.
இருப்பினும், ஓய்வளிக்கும் திட்டத்தை பின்பற்ற அதிகாரிகள் அறிவுறுத்தியதால் மதுரை நகர் உட்பட பல மாவட்டங்களிலும் காவல் நிலைய போலீஸார் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி யினருக்கு சுழற்சி அடிப்படையில் 4 அல்லது 5 நாள் விடுப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ ஊடரங்கு நேரத்தில் தொடர்ந்து பணியில் இருப்பதை தவிர்த்து, குறிப்பிட்ட நாட்கள் தங்களது குடும்பத்தினருடன் செலவிடும் வகையில் இத் திட்டம் கொண்டு வரப்பட்டது. மதுரை நகரில் நேற்று முதல் இது அமலுக்கு வந்தது. ஊரடங்குவரை இது அமலில் இருக்க வாய்ப்புள்ளது,’’ என்றார்.