

தமிழகம் முழுவதும் கரோனா தடுப்புக்கான ஊரடங்கை அமல்படுத்துவதில் போலீஸார் தீவிரம் காட்டியுள்ளனர். மதுரையில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட போலீஸார் சுழற்சி முறையில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தேவையின்றி வெளியில் வருவோர் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.
சாலையோரம், சந்திப்புப் பகுதியில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்கின்றனர். இதுபோன்ற போலீஸாரின் கெடுபிடியால் பொழுதைக் கழிப்பதில் இளைஞர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதுரை மாடக்குளம், எஸ்எஸ்.காலனி உள்ளிட்ட நகரையொட்டிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் பக்கத்திலுள்ள கண்மாய், ஊரணி, தோப்பு, தோட்டப் பகுதியில் குவிகின்றனர். அவர்கள் சமூக விலகல் இன்றி, சூதாடுவது உள்ளிட்ட சில சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடுவதாக மதுரை நகர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து ஆளில்லாத பறக்கும் விமானம் மூலம் நகரையொட்டிய பகுதிகளை போலீஸார் கண்காணிக்கின்றனர். மாடக்குளம், எஸ்எஸ்.காலனி பகுதிகளின் அருகிலுள்ள கண்மாய் உள்ளிட்ட காட்டுப்பகுதியில் இருந்து ஏராளமான இளைஞர்கள் தப்பியோடியது தெரிந்தது. ஆளில்லாத பறக்கும் விமானம் மூலம் கண்காணிப்பதை அறிந்த ஓரிருவர் தங்கள் கை, சட்டை போன்ற ஆடைகளால் தலை, முகத்தை மறைத்துக்கொண்டு வயல் வெளியில் ஓடினர். ஆடையால் முகத்தை மூடிக்கொண்டு பதுங்குவதுமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இக் காட்சிகள் நடிகர் வடிவேலுவின் காமெடி வசனங்களுடன் இணைத்து மதுரை மாநகர் காவல்துறை ஃபேஸ்புக், சில சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்படுகிறது.
போலீஸார் கூறுகையில், ‘‘ஊரடங்கு , பொதுவேலை நிறுத்தம், 144 தடை உத்தரவின்போது, ஆளில்லாத பறக்கும் விமானம் மூலம் மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிப்பது வழக்கம். கரோனா தடுப்பு ஊரடங்கின் முக்கிய நோக்கமே சமூக விலகல், கூட்டம் தவிர்த் தல் வேண்டும் என, அரசு வலியுறுத்துகிறது. இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் கண்காணிக்கிறோம். அடையாளம் காணப்படுவோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடைமுறை தமிழகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது,’’ என்றனர்.
வடிவேலுவின் காமெடி வசனங்களுடன் இணைத்து மதுரை மாநகர் காவல்துறை வெளியிட்ட வீடியோ: