

துபாயில் மாரடைப்பால் காலமான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த துரைராஜின் உடல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் எடுத்த தீவிர முயற்சியால் இன்று இரவு எமிரேட்ஸ் சிறப்பு விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் மகாராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ். 45 வயதான இவர் துபாயில் பணி செய்துவந்தார். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 17-ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் துரைராஜ். அவரது உடலைச் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பதற்கான முன்னெடுப்புகளை அவர் வேலை பார்த்து வந்த நிறுவனமும், துபாயிலுள்ள தமிழ் அமைப்புகளும் மேற்கொண்டன. ஆனால், அதற்குள்ளாக கரோனா கெடுபிடிகள் ஆரம்பமாகி விமானப் போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டதால் துரைராஜின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, துரைராஜின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உதவிடும்படி அவரது உறவினர்கள் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி.யிடம் கோரிக்கை வைத்தார்கள். இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைத் தொடர்பு கொண்டு பேசினார் வைகோ. துபாயிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளையும் அவர் தொடர்பு கொண்டு பேசினார். உடனே, துபாயிலுள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு பேசிய தூதரக அதிகாரிகள், துரைராஜின் உடலை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
இதையடுத்து, துரைராஜின் உடலை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான அனைத்து ஒப்புதல்களும் பெறப்பட்டு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் சிறப்பு விமானம் மூலம் துரைராஜின் உடல் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்திய நேரப்படி இன்று இரவு 10.45 மணிக்கு துரைராஜின் உடல், சென்னை விமான நிலையத்துக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துரைராஜின் உடலைப் பெற்றுக்கொள்வதற்காக சென்னைக்கு விரைந்திருக்கும் அவரது உறவினர்கள், துரைராஜின் உடலை இந்தியா கொண்டுவர பேருதவி செய்திட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.