

முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை அதிமுகவினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக கூறி அதிமுகவினர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கண்டன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னை ராமாபுரத்தில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். இதேபோல், அடையாறு சத்யா ஸ்டுடியோ, திருவொற்றியூர், பல்லவன் அருகே 2 இடங்களில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நேற்று இரவில் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அங்கு போலீஸார் குவிக்கப்பட்டதால், அதிமுகவினரை தடுத்து நிறுத்தினர். இதனால், அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.