

ஊரடங்கு காரணமாக சத்தியமங்கலத்தில் சம்பங்கி பூ விற்பனை ஆகாததால் 3 டன் பூக்களை விவசாயிகள் சாலையோரம் கொட்டிச் சென்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான பு.புளியம்பட்டி, பவானிசாகர், வடவள்ளி, தாண்டாம்பாளையம், சிக்கரசம்பாளையம், ராஜன்நகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.
ஊரடங்கு காரணமாக சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் இயங்கும் பூ மார்க்கெட் மூடப்பட்டது. இதையடுத்து மலர் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பூக்களை மார்க்கெட்டில் விற்பனை செய்ய முடியாமல் நறுமண ஆலைக்குக் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள சம்பங்கி விவசாயிகள் நாளொன்றுக்கு 6 டன் பூக்கைளை பறித்து வரும் நிலையில், நறுமண ஆலைகள் நாள் ஒன்றுக்கு மூன்று டன் சம்பங்கி பூக்கைளையே வாங்கிக் கொள்கின்றன.
மீதமுள்ள பூக்களை விற்பனை செய்ய முடியாததால் விவசாயிகள் சாலையோரத்தில் கொட்டிச் செல்கின்றனர். இதன்படி, தினமும் மூன்று டன் சம்பங்கி பூக்கள் விற்பனை செய்ய முடியாமல் சாலையோரம் கொட்டப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.