

ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற பிரதமரின் எண்ணத்துக்கு தலைமை நிர்வாகி தடை போடுகிறார் என புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று (ஏப்.21) சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"உலக மக்களை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. தினமும் உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பது வேதனை அளிக்கிறது.
பிரதமர் மோடி தனது முழு எண்ணத்தை வெளிப்படுத்த ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். அதன் காரணமாக, பொதுமக்கள் பாதிக்கப்படுவர் என உணர்ந்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு 3 மாத உணவு பொருட்களை இலவசமாக அறிவித்து நம் மாநிலத்துக்கும் முழுமையாக தந்துள்ளார்.
ஆனால், அறிவித்து ஒரு மாதம் ஆன நிலையில் கூட நம் மாநில மக்களுக்கு சேர வேண்டிய அரிசி, பருப்பு இதுவரை தரப்படவில்லை. 20 சதவிகித மக்களுக்கு மட்டுமே உணவு பொருட்கள் சென்று சேர்ந்துள்ளது. அன்றாடம் அரிசி வாங்கி குடும்பம் நடத்துபவர்களுக்கு அரிசி வழங்காதவாறு இங்குள்ள அதிகார வர்க்கத்தினர் தடை செய்துகொண்டிருகின்றனர்.
இதன் காரணமாக, ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற பிரதமரின் எண்ணத்துக்கு தலைமை அதிகாரிகள் தடை போட்டு வருகின்றனர். தலைமை நிர்வாகி அதிகாரிகளை வழிநடத்துகிறார். மீதமுள்ள மக்களுக்கு எப்போது அரிசி தரமுடியும் என கூற முடியாத நிலை உள்ளது. 4 நாட்களுக்குள் உணவு பொருட்களை தந்துவிடுவோம் என கூறியவர்கள், 10 நாட்களுக்கு மேலாகியும் கொடுக்கவில்லை. இது மிகவும் வேதனையை தருகிறது.
பிரதமர் மோடி தந்துள்ள உணவு பொருட்களை ஏழை, எளிய மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க தயக்கம் காட்டும் நிர்வாகி, தலைமை செயலர் ஆகியோர் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். மீதமுள்ள மக்களுக்கு எப்போது கொடுத்து முடிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்படவில்லை.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் நான் கேட்டபோது சரியான பதிலை அவர்கள் அளிக்கவில்லை. எந்த பகுதிக்கு எந்த தினத்தில் அரிசி வழங்கப்படும் என்ற முன்னறிவிப்பு இல்லாமல் பொருட்களை எடுத்துச் செல்வதால் மக்கள் அதனை வாங்க வருவதில்லை. இதனால் குறைந்த அளவிலான மக்களுக்கே அரிசி வழங்கப்படுகிறது.
அதிகாரிகள் சுயமாக செயல்பட்டு வருகின்றனர். மோடி வழங்கியுள்ள அரிசி மக்களின் முழுமையான வரிப்பணம். இதனை எப்படி விநியோகிக்கின்றனர் என்பதனை மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். மத்திய உள்துறை அமைச்சருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். அதில் இங்குள்ள அவல நிலையை எடுத்துக் கூறியுள்ளேன். இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் அரிசி, பருப்பு ஏழை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
வறுமையில் வாடும் மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் அரிசி வழங்க வேண்டும் இவை அனைத்தும் உடனடியாக மக்களுக்கு அதிகாரிகள் கொண்டு சேர்க்கவில்லை என்றால் நான் நேரடியாக உள்துறை அமைச்சரை சந்தித்து குறைகளை கூறுவேன். மாநில அரசு அறிவித்த ரூ.2,000 எத்தனை பேர் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது என அதிகாரிகள் மக்களிடத்தில் கூற வேண்டும்’’
இவ்வாறு வைத்திலிங்கம் தெரிவித்தார்.