

மத்திய அரசு மருத்துவ உபகரணங்களுக்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஏப் 19) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''புதுச்சேரியில் கரோனா பாதிப்புக்குள்ளான 4 பேர் சிகிச்சையிலிருந்த நிலையில், இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் மாநிலத்தில் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 ஆகக் குறைந்துள்ளது.
தற்போது புதுச்சேரி மாநிலத்தில் 3,045 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். மாநிலத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மத்திய அரசின் விதிமுறைகளின்படி, புதுச்சேரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் 28 நாட்களுக்கு முடக்கப்படும். கரோனா பரவாமல் தடுக்க நாம் இந்த உத்தரவைக் கடைப்பிடிக்க வேண்டும்.
மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, நாளை(ஏப் 20) முதல் விவசாயிகள் விவசாயத் தொழிலை மேற்கொள்ளலாம். விதை, உரக்கடைகள் திறந்திருக்கும். விளைபொருட்களை மார்க்கெட்டுகளுக்குக் கொண்டு வர அனுமதி தேவையில்லை. இதேபோல, கட்டுமானப் பணிகள், எலக்ட்ரீஷியன், தச்சர்கள், பிளம்பர்கள் தொழில் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மீன்பிடித் தொழிலுக்கு நமது மாநிலத்தில் தடைக்காலம் இருந்தாலும் கூட, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஐடி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படலாம். அரசு அலுவலகங்கள் அனைத்தும் செயல்படும். அங்கு 33 சதவீதம் பணியாளர்கள் பணியாற்றுவர்.
அரசுப் பணியாளர்கள் பணிக்கு வரும்போது முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். வாகனங்களில் இருவர் வருவதைத் தவிர்க்க வேண்டும். தொழிற்சாலைகள் படிப்படியாகவே உற்பத்தியைத் தொடங்க வேண்டும். அங்கு பணிக்கு வரும் தொழிலாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்வதுடன், கிருமிநாசினி, முகக்கவசம் அணிய வேண்டும்,
சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், தொழிற்சாலையை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். வெளிமாநிலத்திலிருந்து யாரையும் வேலைக்கு கொண்டு வரக் கூடாது. புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி. தங்கி பணிபுரியும் மற்ற மாநிலத்தவருக்கு அனுமதி உண்டு. தொழிலாளிகள் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதியில்லை.
தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழிலாளர்களை தொழிற்சாலைகளுக்குப் பக்கத்தில் வைத்து பராமரித்து, வேலை வாங்க வேண்டும். இந்த விதிமுறைகளை கடைப்பிடித்தால்தான் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்படும். இல்லையெனில் அனுமதி கிடையாது. மீறிச் செயல்பட்டால் மூடப்படும்.
கரோனா தொற்று நோய்க்கான மருத்துவ உபகரணங்கள், வென்டிலேட்டர்கள், மானிட்டர்கள், மருத்துவக் கவச உடைகள், முகக்கவசங்கள், தேவையான மருந்துகள், பரிசோதனைக் கருவிகள் போதுமான அளவில் கிடைக்கவில்லை. மத்திய அரசு தேவைப்படும் அளவுக்கு கொடுக்கவில்லை. அவற்றை மாநில அரசுகளே இறக்குமதி செய்ய மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.
கரோனா தொற்றுக்கான மருத்துவ உபகரணங்களை கொண்டுவர ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இக்கட்டான சூழல் நிலவும் இக்காலகட்டத்தில், மத்திய அரசு மருத்துவ உபகரணங்களுக்கான ஜிஎஸ்டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் மாநிலங்கள் மருத்துவ உபகரணங்களை அதிக அளவில் வாங்க ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்''.
இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.