புதுச்சேரி ஊர்க்காவல் படை வீரர் மீது தாக்குதல் நடத்திய காவலர்; வீடியோ வெளியானதால் பரபரப்பு 

வெளியான தாக்குதல் வீடியோ
வெளியான தாக்குதல் வீடியோ
Updated on
1 min read

புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிப்பால் சீல் வைக்கப்பட்ட பகுதியில் நுழைய அனுமதி மறுத்த ஊா்க்காவல் படை வீரரை தாக்கிய காவலர் கைது செய்யப்பட்டார். இதனிடையே ஊர்காவல் படை வீரரை காவலர் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 8 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் மாஹேவை சேர்ந்த முதியவர் உயிரிழந்தார். மேலும், புதுச்சேரியைச் சேர்ந்த 2 பேர், மாஹேவை சேர்ந்த ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். புதுச்சேரியில் தற்போது 4 பேர் மட்டுமே கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி மூலகுளத்தில் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில் அந்தப் பகுதியில் வெளி நபர்களுக்கு அனுமதி மறுத்து மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது. அங்கு வெளிநபர்கள் உள்ளே செல்லாத வகையில் போலீஸாரும், ஊர்க்காவல் படை வீரர்கள், தன்னார்வலர்களும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கு புதுச்சேரி எஸ்.பி.சத்திரம் கென்னடி நகா் 2-வது குறுக்குத் தெருவைச் சோ்ந்த ஊா்க்காவல் படை வீரா் அசோக் (28) பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில், கடந்த 15-ம் தேதி மூலக்குளத்துக்கு தனது சொந்த பணி நிமித்தமாக சாதாரண உடையில் வந்த புதுச்சேரி கோரிமேடு காவலா் குடியிருப்பில் வசித்துவரும், லாஸ்பேட்டை காவல் நிலைய காவலா் அரவிந்த்ராஜ் (24) என்பவரை ஊர்க்காவல் படை வீரர் அசோக் தடுத்து நிறுத்தி, அனுமதிக்க மறுத்துள்ளார்.

இதுதொடா்பாக, அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஊா்க்காவல் படை வீரரை, காவலா் அரவிந்த்ராஜ் அவதூறாகப் பேசி, தாக்கியுள்ளார்.

இதுகுறித்து அசோக் அளித்த புகாரின் பேரில், ரெட்டியாா்பாளையம் போலீஸாா் காவலா் அரவிந்த்ராஜ் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஊர்காவல் படை வீரர், அசோக்கை காவலர் அரவிந்த்ராஜ் தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதையடுத்து, காவல்துறை உயரதிகாரிகள் அவர் மீது மேல் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கரோனா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படை பெண் காவலரிடம் ஆபாசமாக நடந்து கொண்ட ஐஆர்பிஎன் துணை கமாண்டென்ட் சுபாஷ் கைது செய்யப்பட்டார்.

கரோனா காலத்தில் போலீஸாரின் இத்தகைய அடுத்தடுத்த சம்பவங்களால் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in