

கரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சீல் வைக்கப்பட்டிருந்த மதுபான குடோனின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து மது பாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர். இது சம்பந்தமாக இருவர் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் மதுபானக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் மதுபானக் கடைகளில் இருந்து சட்டவிரோதமாக மதுபானங்கள் எடுத்து வரப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்தன.
இதனைத் தடுக்க கலால் துறை துணை ஆணையர் தயாளன் தலைமையில் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படும் மதுபானங்களை அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர்.
மேலும், புதுச்சேரியில் உள்ள மொத்த மதுபான விற்பனை குடோன்கள், பார்கள், சில்லரை மதுபானக் கடைகளை கலால் துறையினர் தொடர்ந்து கண்காணித்து சீல் வைத்து, மதுபானங்களின் இருப்பு குறித்து கணக்கெடுத்து வருகின்றனர். இதுவரை புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 28 கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று(ஏப் 17) நள்ளிரவு புதுச்சேரி நகரின் மையப் பகுதியான, மறைமலையடிகள் சாலையில் உள்ள தனியார் மதுபான குடோனின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் மதுபானங்களை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்த தகவல் இன்று (ஏப்.18) அதன் உரிமையாளருக்கு தெரியவந்த நிலையில், ஒதியஞ்சாலை காவல்நிலையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, இரண்டு மர்ம நபர்கள் மதுபான குடோனின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று மதுபானங்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுசம்பந்தமாக போலீஸார் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.