ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நாட்களில் பணிக்கு வராதவர்களுக்கு ஊதிய பிடித்தம்: அஞ்சல் துறை அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நாட்களில் பணிக்கு வராதவர்களுக்கு ஊதிய பிடித்தம்: அஞ்சல் துறை அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி
Updated on
1 min read

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நாட்களில் பணிக்கு வராத அஞ்சல் ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என அஞ்சல் துறை கடிதம் அனுப்பியுள்ளதால், ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில் மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பால், மருந்தகம், அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள், காய்கறி சந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுத் துறை மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் தங்களது ஊழியர் களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யக் கூடாது, மேலும் பணியிலிருந்து நீக்கக் கூடாது என பிரதமரும், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், அஞ்சல் துறை தமிழ்நாடு வட்டத் தலைவர், அனைத்து அஞ்சல் துறை உயர் அதிகாரிகளுக்கு ஏப்.16-ம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில், ‘ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வராத நாட்கள் ‘ஆப்சென்ட்’ என கருதப்பட்டு ஊதியம் பிடித்தம் செய்யப்படும்’ என தெரிவித்துள்ளார். இதனால் அஞ்சல் துறை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளன தமிழ்நாடு வட்டச் செயலாளர் ஏ.வீரமணி, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

இருக்கும் ஊழியர்களைக் கொண்டு அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்படாமல் பணியாற்றுங்கள் என்றுதான் உத்தரவிடப்பட்டு உள்ளது. போக்குவரத்து வசதி இல்லாததால், சிலர் வேலைக்கு வரமுடியாத சூழல் உள்ளது. ஊழி யர்களின் ஊதியத்தில் பிடித்தமோ, பணி நீக்கமோ செய்யக்கூடாது என பிரதமர் உட்பட அனைவரும் வலியுறுத்தி வரும் நிலையில், அஞ்சல் துறைத் தலைவரின் இந்த கடிதம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

இதுதொடர்பாக மற்ற சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து, ஏப்.20-ம் தேதி அஞ்சல் துறை தமிழ்நாடு வட்டத் தலைவரை சந்தித்து இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்க உள்ளோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in