

மதுரை அருகே ஊரடங்கின்போது, ஜல்லிக்கட்டு காளை இறப்பு நிகழ்வில் அதிகமான மக்கள் கூடியது தொடர்பாக கோயில் பூசாரி உட்பட 50 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
கூட்டத்தைத் தடுக்க தவறிய எஸ்.ஐ, தலைமைக்காவலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம், பாலமேடு அருகிலுள்ள முடுவார்பட்டி கிராம கோயிலான செல்லாயி அம்மன் கோயில் காளை வயது முதிர்வு காரணமாக ஏப்ரல்.,12-ம் தேதி இறந்தது.
ஜல்லிக்கட்டு காளையான அந்த காளையின் உடலை ஊர்மந்தை அருகில் அடக்கம் செய்தனர். இந்த நிகழ்வில் ஊர் மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஊரடங்கு அமலில் இருக்கும்போது, கரோனா தடுப்புக்கான சமூக விலகல் இன்றி, முகக்கவசம் அணியாமலும் மக்கள் கூடியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இது தொடர்பாக கோயில் பூசாரியான மலைச்சாமி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த வடிவேல் (38), ராஜ்குமார் (35), பிரேம்குமார்(31), காமாட்சி(49), கண்ணன்(37), கரிகாலன் (50) உட்பட 50 பேர் மீது பாலமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், ஊரடங்கின்போது, அதிகமான மக்கள் கூடுவதைத் தடுக்கத் தவறியதாக பாலமேடு காவல் உதவி ஆய்வாளர் ஜெய்கண்ணன், எஸ்.பி தனிப்பிரிவு தலைமைக் காவலர் மாரிராஜ் ஆகியோரை மதுரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.