

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 597 பேருக்கு கரோனா நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 16 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 68 வயது மூதாட்டி, 38 வயது இளைஞர், தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 53 வயது பெண் ஆகியோரின் ரத்தம் கரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவு வராத நிலையில் 3 பேரும் நேற்று மரணம் அடைந்தனர்.
இது குறித்து சுகாதாரத் துறையினர் கூறும்போது, மரணம் அடைந்த 3 பேருமே ஏற்கெனவே பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். எனினும், பரிசோதனை முடிவு வந்த பின்னரே உண்மை நிலவரம் தெரிய வரும் என்றனர்.
தமிழகத்தில் கரோனா அதிகம் பாதித்த 22 மாவட்டங்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம் மத்திய அரசின் ஹாட் ஸ்பாட் பட்டியலில் இடம் பெற்று ள்ளது. குமரியில் இதுவரை 16 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கரோனா நோய் தொற்று தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
கரோனா பாதித்தவர்களின் உறவினர்கள் வசிக்கும் டென்னிசன் ரோடு, வெள்ளடிச்சிவிளை, மணிகட்டிபொட்டல், தேங்காய் பட்டினம் ஆகிய பகுதிகள் போலீஸாரின் முழு கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இங்கு கரோனா தொற்று தடுப்புப் பணிகள் நடைபெறுவதை மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் கருணாகரன், கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினபு, குமரி எஸ்.பி. ஸ்ரீநாத் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.