

ஊரடங்கு அமலால் திருநங்கைகளும் தங்களது வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். ஒரு அமைப்பின் கீழ் செயல்படாமல் சிறு சிறு குழுக்களாக இருந்துகொண்டு ஆங்காங்கே கிடைத்த வேலையைச் செய்தும், பிறரிடம் கையேந்தி யாசகம் பெற்றும் நாட்களை நகர்த்தும் திருநங்கையருக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணங்கள் கிடைப்பதிலும் சிக்கல்கள் இருக்கின்றன.
இதையெல்லாம் புரிந்துகொண்டு தன்னார்வலர்களும் பிற சேவை அமைப்புகளும் ஆங்காங்கே திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர்.
அந்த வகையில், காரைக்குடியில் ஒரே இடத்தில் ஒரு குழுவாக வசித்துவரும் 20 திருநங்கைகளுக்கு இந்த ஊரடங்கு சமயத்தில் ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறது ரோட்டரி சங்கம். இவர்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருட்களை ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.லியாகத் அலி தலைமையில் சங்கத்தின் செயலாளர் சே.அறிவுடைநம்பி, உறுப்பினர்கள் மு.வெள்ளைச்சாமி , கே.என்.சுப்பையா, என்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் இன்று வழங்கினர்.
வட்டாட்சியர் பாலாஜி முன்னிலையில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து இந்த நிவாரணப் பொருட்களை பெற்றுக்கொண்ட திருநங்கையர், தக்க தருணத்தில் உதவிக்கரம் நீட்டிய ரோட்டரி நிர்வாகிகளுக்கு கலங்கிய விழிகளுடன் கைகூப்பி நன்றி தெரிவித்தனர்.