

புதுச்சேரியில் பெண் காவலரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட ஐஆர்பிஎன் துணை கமாண்டென்ட் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் தற்போது கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவலர்கள் மற்றும் ஐஆர்பிஎன் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி ஐஆர்பிஎன் துணை கமாண்டென்ட் சுபாஷ் என்பவருக்கு கரோனா பாதுகாப்புப் பணிக்காக திருபுவனை பகுதியில் பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், திருபுவனை காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலரிடம் சுபாஷ், ஆபாசமாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து அவர் உயரதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்தப்பட்டதில் துணை கமாண்டென்ட் சுபாஷ், பெண் காவலரிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகத் தெரியவந்தது.
அதன் பேரில் அவர் மீது 4 பிரிவின் கீழ் திருபுவனை போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரோனா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த துணை கமாண்டென்ட் கைது செய்யப்பட்ட சம்பவம், காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.