

திருவள்ளூரில் காய்கறிகளை இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த விவசாயியை காவல் ஆய்வாளர் மறித்து அவரை அலைக்கழிக்க வைத்தார். இதனால் விரக்தியடைந்த விவசாயி காய்கறிகளை சாலையில் கொட்டினார். அதன் காணொலிக் காட்சி வைரலானதால் ஆய்வாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. எஸ்.பி. விவசாயியின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் அகரம் கண்டிகையைச் சேர்ந்த விவசாயி கார்த்திக். இவர் தனது தோட்டத்தில் விளைந்த காய்க்கறிகளை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சந்தைக்குச் சென்றுள்ளார். அப்போது அவரை போலீஸார் வழிமறித்து சோதனை செய்துள்ளனர். மேலும், அவரைச் சந்தைக்குச் செல்ல அனுமதிக்கவில்லை.
காலை 6 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே காய்கறிகளைச் சந்தையில் கொண்டு விற்பனை செய்ய வேண்டிய நிலையில், சந்தைக்குச் செல்ல தன்னை அனுமதிக்கும்படி ஆய்வாளரிடம் கார்த்திக் பலமுறை கேட்டார். ஆனால், ஆய்வாளர் அனுமதிக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த கார்த்தி, இதற்குமேல் இந்தக் காய்கறிகள் யாருக்கு பயன்படப் போகின்றன, குப்பைக்குத்தான் போகும் என்று கூறியவாறு சாலையில் காய்கறிகளைக் கொட்டினார்.
இதையடுத்து கார்த்திக்கை போலீஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதை ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமுக வலைதளத்தில் பதிவிட, காணொலி வைரலானது. விவசாயப் பொருட்களைக் கொண்டு செல்லத் தடையில்லை என்ற நிலையில் போலீஸாரின் இந்த அத்துமீறல் உயர் அதிகாரிகள் கவனத்திற்குச் சென்றது. இதனால் விவசாயி கார்த்திக்கை போலீஸார் விடுவித்தனர்.
இந்தப் பிரச்சினை தமிழக அரசின் கவனத்திற்குச் சென்ற நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டார்.
பின்னர் எஸ்.பி. அரவிந்தன் சம்பந்தப்பட்ட ஆய்வாளருடன் அப்துல் கலாம் எழுதிய புத்தகம், காய்கறிகள், மளிகைப் பொருட்களுடன் விவசாயி கார்த்திக் வீட்டுக்கு நேரில் சென்றார். அவரிடம் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
“மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆணைக்கிணங்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் காய்கறி வியாபாரி கார்த்திக்கை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்த வெங்கல் காவல் நிலையக் காவலர்கள் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கார்த்திக் என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
கரோனா வைரஸ் தொடர்பாக கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுரை கூறி அவரைக் காத்திருக்க வைத்துவிட்டு வேறு வேலைக்கு ஆய்வாளர் சென்றுவிட்டார். இதனால் தான் கொண்டுவந்த காய்கறிகளை அவ்வழியாக வந்த காவல்துறை வாகனத்தை மறித்துக் கொட்டியதால் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிகுமார் ஆணைக்கிணங்க சம்பவத்திற்குக் காரணமான காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்டுள்ள கார்த்திக் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி இழப்பீட்டினை ஈடுகட்டும் விதமாக காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கினார்”.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு பொதுமக்களை அடக்கி வீடுகளில் முடக்க அல்ல. அவர்கள் நலன் காக்க என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பொதுமக்களிடம் கடுமையாக நடக்காமல் ஊரடங்கைக் கடைப்பிடிக்க போலீஸார் வலியுறுத்த வேண்டும். மீறினால் சிறு தண்டனை, வாகனம் பறிமுதல், வழக்குப் பதிவு செய்யலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னையில் காவலர்கள் கையில் தடி எடுத்துச் செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக போலீஸாரின் அணுகுமுறை நல்ல பெயரை கொடுத்து வரும்வேளையில் தருமபுரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நடந்துள்ள சில சம்பவங்கள் போலீஸாரின் மதிப்பைக் குறைக்கும் வகையில் இருப்பதால் போலீஸார் கவனமாக இருக்கவேண்டும் என உயரதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.