

தமிழகத்தில் இன்று மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,204 ஆக அதிகரித்துள்ளது என்று பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று (ஏப்.14) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
"இன்று வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்கள் 28 ஆயிரத்து 711 பேர். அரசுக் கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 135. இன்றைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 31. இதில் 21 பேர் ஒரே இடத்திற்குச் சென்று வந்தவர்கள். ஒருவர் மாநிலத்திற்குள்ளேயே பயணித்துள்ளார். 9 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். இவர்களுள் ஆண்கள் 15, பெண்கள் 16.
இவர்களுள் திண்டுக்கல் மாவட்டத்தில் 9 பேர், சென்னையில் 5 பேர், தஞ்சாவூரில் 4 பேர், தென்காசியில் 3 பேர், மதுரையில் 2 பேர், ராமநாதபுரத்தில் 2 பேர், நாகப்பட்டினத்தில் 2 பேர், கடலூரில் ஒருவர், சேலத்தில் ஒருவர், சிவகங்கையில் ஒருவர், கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் ஒருவர் ஆவர்.
தொற்று தடுப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த மண்டல ரீதியாக 12 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 14 நாள் வரை இந்த வைரஸ் உயிர் வாழும். அதனால்தான் கண்டெயின்மெண்ட் மண்டலங்களில் இதனை மட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இன்று உறுதி செய்யப்பட்டவர்களுள் அறிகுறிகளுடன் உள்ளவர்கள் 8 பேர். இதுவரை 10 வயதுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 33. இன்று தீவிர மூச்சுப் பிரச்சினை (SARI) உள்ள 39 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. அதில் ஒன்று கூட பாசிட்டிவ் இல்லை. இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 255. இதுவரை சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 202. இதுவரை1,204 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 81 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்".
இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
சென்னையில் மருத்துவர் ஒருவரை அடக்கம் செய்வதை மக்கள் புறக்கணித்துள்ளனரே?
கரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளோம். இதில் அனைவரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. நேற்று சென்னையில் நடைபெற்ற சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதுகுறித்து தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.
தமிழகத்தில் குறைவாகப் பரிசோதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளதே?
நமக்கு மார்ச் 9-ம் தேதிக்குப் பிறகுதான் முதல் நோயாளி வந்தார். கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் முன்பே வந்துவிட்டது. அதனால் அப்போதிலிருந்தே பரிசோதனை செய்ய ஆரம்பித்து விட்டனர். பரிசோதனைக் கூடங்களில் பணியாளர்கள் இல்லாததால் அவை செயல்படவில்லை என்பது முற்றிலும் தவறு. எல்லாம் நன்றாகச் செயல்படுகின்றன.
கால்நடைத்துறை, வேளாண்மை உள்ளிட்ட துறைகளின் ஒத்துழைப்புடன் சோதனைக் கருவிகளைப் பயன்படுத்தி வருகிறோம். இனிவரும் காலங்களில் பயண வரலாறு, தொடர்பு இல்லாவிட்டாலும், அறிகுறிகள் உள்ளவர்களிடம் பரிசோதனை செய்யப்படும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர்பில் உள்ளவர்களைக் கண்டறிகிறோம். தடுப்பு நடவடிக்கைகளில் பின்னடைவு இல்லை. முன்னடைவு தான் இருக்கிறது.
எல்லோரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதே?
மருத்துவமனையில் இருப்பவர்கள் எங்கு இருக்கிறார்களோ அதைப் பொறுத்து மூன்றடுக்கு முகக்கவசம், என்-95 முகக்கவசம், பிபிஇ கவசங்கள் அணிய வேண்டும். பொதுமக்களில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள், நீரிழிவு நோயுள்ளவர்கள், ரத்த அழுத்தம், புற்றுநோய் உள்ளவர்கள் மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும். சாதாரணமானவர்கள் வீடுகளில் தயாரித்த முகக்கவசங்களை அணியலாம்.
இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார்.