

கரோனா தொற்றில் இருந்து விடுபட்ட முதல் மாநிலமாக தமிழகம் மாறவேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்தார்.
கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வரின் அறிவுரைகளை எடுத்துரைக்கும் வகையில், மதுரை திருமங்கலம் தொகுதியிலுள்ள கிராமங்களில் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் வாகன பிரச்சாரம் செய்தார். துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அவர் பேசியதாவது;
உலகில் 200 நாடுகளை அச்சுறுத்தும் கரோனாவை தடுக்க, வல்லரசு நாடுகளே திணறுகின்றன. சீனாவில் உருவான இந்த வைரஸ் மருத்துவ உலகத்திற்கே சவாலாக உள்ளது. இந்தியாவில் இந்த நோய் பரவலைத் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கிறது.
29 மாநிலங்களிலும் முன் மாதிரியாக நோயிலிருந்து மக்களைக் காக்க, முதல்வர் இரவு, பகலாக பாடுபடுகிறார். குறிப்பாக ரூ. 3,280 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரண உதவிகளை மேற்கொண்டுள்ளார். அம்மா உணவகத்தின் தரம் மேம்படுத்தப் பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியே செல்லும்போது, முகக்கவசம் அணியவேண்டும். சமூக விலகல் வேண்டும். காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் வந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
யாருக்கும் கைகொடுக்கக்கூடாது. கைகளை நன்றாக சோப்புபோட்டு கழுவவேண்டும். வீட்டுக்க அருகில் நோய் தொற்று யாருக்காவது இருந்தால் 24 மணி நேரம்இயங்கும் 1077 என்ற உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம்.
உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பிற உதவிகளுக்கும் இந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசலாம். தினமும் அனைத்து கிராமங்களிலும் கிருமி நாசினிகள் தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல்வரின் விழத்திரு, விலகியிரு, வீட்டிலிரு என்ற முதல்வரின் வேண்டுகோளை தாரக மந்திரமாக எடுத்து கொள்ளுங்கள். கொடிய நோயிலிருந்து உலகத்திலேயே விடுபட்ட முதல்மாநிலமாக தமிழகம் மாறவேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
ஜெ.,பேரவை துணைச் செயலர் வெற்றிவேல், மாவட்ட துணைச் செயலர் ஐயப்பன், இலக்கிய அணி செயலர் திருப்பதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.