ஊரடங்கையொட்டி ‘ஒரு காவலர் ஒரு குடும்பம்’ திட்டம்: சொந்தப் பங்களிப்பில் உணவுப்பொருட்கள் வழங்கல்- மதுரை நகர் போலீஸாரின் மனிதநேயம்

புதூர் காவல் நிலைய பகுதியில் தேர்ந் தெடுக்கப்பட்ட குடும்பத்தினருக்கு காவல் உதவி ஆணையர் லில்லி கிரேஸ் உணவுப்பொருட்களை வழங்கினார்.
புதூர் காவல் நிலைய பகுதியில் தேர்ந் தெடுக்கப்பட்ட குடும்பத்தினருக்கு காவல் உதவி ஆணையர் லில்லி கிரேஸ் உணவுப்பொருட்களை வழங்கினார்.
Updated on
1 min read

ஊரடங்கையொட்டி ஒரு காவலர் ஒரு குடும்பத்தைத் தத்தெடுத்து சொந்த பங்களிப்பில் உணவுப்பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை மதுரை நகர் போலீஸார் தொடங்கி உள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மக்களுக்குத் தேவையான உதவிகளை தமிழக அரசு செய்தாலும், ரேசன் பொருட்கள் வாங்க முடியாத ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் என, பலர் உணவுப்பொருட்களுக்கென மிகவும் சிரம்மப்படும் சூழல் பல இடங்களில் நிலவுகிறது.

இதை கவனத்தில் கொண்டு மதுரை நகரில் உணவுக்கு வழியின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் ‘ ஒரு காவலர் ஒரு குடும்பம்’ தத்தெடுப்பு என்ற திட்டத்தை மதுரை நகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தொடங்க திட்டமிட்டார்.

இதற்காக அவர் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்தார். அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மத்தியில் வரவேற்பு நிலவியது.

இந்நிலையில் காவல் ஆணையர் வழிகாட்டுதலின்படி, இத்திட்டத்தை முதலில் அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் லில்லி கிரேஸ் தொடங்கி உள்ளார். இவரது உட்கோட்டத்திற்கு உட்பட புதூர், அண்ணாநகர், மதிச்சியம் காவல் நிலைய எல்லையில் ஆதரவற்ற, உணவுக்கு தவிக்கும் குடும்பங்களை கண்டறிந்து, பட்டியல் தயாரிக்கிறார்.

இதற்காக அவர் தன்னார்வலர்கள் குழுவை ஏற்படுத்தி இருக்கிறார். அக்குழுவினர் தெரு, தெருவாக சென்று உண்மை நிலைய ஆய்வு செய்து பட்டியல் தயாரிக்கின்றனர்.

இந்த பட்டியலின்படி, ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை அந்தந்த காவல் நிலைய காவலர்கள், அவர்கள் குடும்பத்தினர் சொந்த பங்களிப்பில் இருந்து பொருட்கள் வாங்குகின்றனர்.

முதல் கட்டமாக சம்பந்தப்பட்டோருக்கு 15 நாட்களுக்கு தேவையான பொருட்களை வழங்குகின்றனர். முதன்முறையாக புதூர் காவல் நிலைய பகுதியில் 100 பேருக்கு தலா 10 கிலோ அரிசி, மளிகை, உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை உதவி ஆணையர் லில்லி கிரேஸ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆய்வாளர் திலகவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அடுத்தடுத்த காவல் நிலையங் களிலும் தலா 100 குடும்பத்திற்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என, அவர் தெரிவித்தார். மதுரை நகரில் 24 காவல் நிலைய எல்லைக் கு உட்பட்ட பகுதியிலும் இத்திட்டம் விரிவுப்படுத்தப் படும் என, காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in