

நோன்புப் பெருநாள் தொடங்கியதை அடுத்து நோன்புக்கஞ்சியை பள்ளிவாசல்களில் காய்ச்சி வழங்க அனுமதிக்க வேண்டும். கஞ்சிக்கான பச்சரிசியை வழக்கம்போல் இவ்வருடமும் அரசு வழங்கிட வேண்டும் என முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் இன்று விடுத்துள்ள அறிக்கை:
''கரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவளித்து வருகின்றோம். முஸ்லிம்கள் இஸ்லாமிய ஹிஜ்ரி மாதம் ரமலான் மாதம் முழுவதும் 30 நாட்களும் 14 மணிநேரம் உண்ணாமல், பருகாமல் நோன்பிருந்து இறைவனை வழங்கி வழிபட்டு, இல்லாதோருக்கு ‘ஜகாத்’ எனும் ஏழை வரி வழங்கி வருகின்றனர்.
இவ்வருட ரமலான் நோன்பு எதிர் வரும் ஏப்ரல் 25 -ம் தேதி தொடங்குகின்றது. கரோனா தடுப்பு ஊரடங்கு நடைமுறைகளை ரமலான் நோன்புக் காலங்களிலும் அரசின் நடவடிக்கைகளின்படி, மார்க்க அறிஞர்கள் கூறி வரும் வழிமுறைகளை முஸ்லிம் சமுதாயம் தொடர்ந்து பின்பற்றிட மீண்டும் வலியுறுத்துகிறோம்.
நோன்புக் கஞ்சி காய்ச்சுவதற்கு பன்னெடுங்காலமாக தமிழ்நாடு அரசு பள்ளி வாசல்களுக்கு பச்சரிசி வழங்கி வருகின்றது. நோன்பிருப்பவர்கள் பள்ளிவாசல்களில் வழங்கும் கஞ்சியைப் பருகியே நோன்பைத் திறக்கின்றனர்.
சமூக இடைவெளியைப் பின்பற்றி பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி காய்ச்சுவதற்கும், அதை மக்களுக்கு வழங்குவதற்கும் தமிழக அரசு அனுமதி வழங்கிடுமாறும், கஞ்சிக்கான பச்சரிசியை வழக்கம்போல் இவ்வருடமும் அரசு வழங்கிட கேட்டுக் கொள்கிறேன்''.
இவ்வாறு காதர் மொகிதீன் கோரிக்கை வைத்துள்ளார்.