புதுச்சேரி மக்களுக்கு கரோனா நிதியுதவி;  பிரதமருக்குப் பாடல் மூலம் கோரிக்கை விடுக்கும் சிறுவர்கள்

பிரதமர் மோடி: கோப்புப்படம்
பிரதமர் மோடி: கோப்புப்படம்
Updated on
1 min read

புதுச்சேரி மக்களுக்கு கரோனா நிதியுதவி வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்து சிறுவர், சிறுமியர் பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரியில் வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மதுபானக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் புதுச்சேரி அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் வரவில்லை.

மேலும், புதுச்சேரி மாநிலத்தில் கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், முகக்கவசங்கள் போன்றவை வாங்குவதற்கும் போதுமான நிதி இல்லை.

"ஊரடங்கு உத்தரவால் மாநிலத்தில் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும் நிதி வழங்கவில்லை. எனவே, கரோனாவுக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், நிவாரணமாகவும் புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசு ரூ.995 கோடி நிதி வழங்க வேண்டும்.

அனைத்து மாநிலத்தையும் போல புதுச்சேரிக்கு நிதி கொடுக்க வேண்டும்" எனக் கோரி முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து கடிதம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் பிரதமரிடம் வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், மத்திய அரசிடமிருந்து நிதி தொடர்பாக இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

இந்நிலையில், ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் நாங்கள் படும் கஷ்டங்களைப் பாருங்கள் என்றும், புதுச்சேரி மாநிலத்துக்கு நிதி கொடுத்து உதவ வேண்டும் எனவும் சிறுவர், சிறுமியர் பாடல் மூலம் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், "மோடி அய்யா, மோடி அய்யா சோறு போடய்யா, புதுச்சேரி மக்களுக்கு நிதி கொடு அய்யா, வீட்டிலே இருக்கிறோம், நீங்க சொன்னதனால். நோயைவிடக் கொடுமை பசிதானய்யா, எங்களுக்குப் பிரதமர் நீங்கதான அய்யா. நாங்களும் உங்களோட மக்கள் தான அய்யா.

144 தடைபோட்டு, 21 நாள் அடைபட்டுள்ளோம், புதுச்சேரி மக்களுக்கு நிதி கொடுங்க" என்று பாடியுள்ளனர்.

தற்போது இந்த வீடியோ புதுச்சேரி மக்களை ஈர்த்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in