கரோனா விடுமுறையால் முடங்குவதைத் தவிர்க்க வீட்டில் இருந்தபடியே மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடமெடுக்கும் ஆசிரியர்கள்

கரோனா விடுமுறையால் முடங்குவதைத் தவிர்க்க வீட்டில் இருந்தபடியே மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடமெடுக்கும் ஆசிரியர்கள்
Updated on
1 min read

கரோனா ஊரடங்கையொட்டி மதுரையில் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மாணவர்களுக்கு கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட சில பள்ளி ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் பாடமெடுக்கின்றனர்.

கரோனா தொற்றைத் தடுக்க, நாடு முழுவதும் ஏப்., 14-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தேர்வெழுத முடியாத நிலையில் ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்து, கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.

இந்த ஊரடங்கின் அசாதாரண சூழ்நிலையைப் பயன்படுத்தி அடுத்தடுத்து வகுப்புகளுக்கு முன்னேறிய மாணவர்களை வீ்ட்டில் இருந்தபடியே தொய்வின்றி பாடங்களைப்படிக்க, ஆன்லைன் மூலம் பாடமெடுக்கும் திட்டத்தை மதுரையில் பல்வேறு தனியார் பள்ளிகள் மேற்கொண்டுள்ளன.

திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடப்புக் கல்வியாண்டில் 2-ம் வகுப்பு முதல் 12 வரை பயிலும் மாணவர்களுக்கான அனைத்து பாடங்களும் ‘ஜூம் ஆப்’ என்ற பிரத்யேக செயலி மூலம் மாணவர்களின் பெற்றோர்களின் செல்போன்களில் இணைப்பை ஏற்படுத்தி அதன்வழியாக பாடங்களை நடத்துக்கின்றனர்.

சந்தேகம் இருந்தால் செல்போன் மற்றும் கணினி, லேப்-டாப்கள் மூலம் கேட்கும் கேள்விகளுக்கும் ஆன்லைன் வழியாகவே ஆசிரியர்கள் பதிலளிக்கின்றனர்.

இதே போன்று மதுரை டிவிஎஸ் லட்சுமி மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட சில தனியார் பள்ளி நிர்வாகங்களின் அறிவுரையின்படி அந்தந்த பாட வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர் செல்போன்களில் வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் வீட்டுப்பாடங்களை அளிக்கின்றனர்.

மாணவ, மாணவியர்களும் ஆசிரியர்கள் கொடுக்கும் பாடங்களை செய்து முடித்தபின், அவற்றை படமெடுத்து ஆசிரியர்களுக்கு அனுப்புகின்றனர்.

ஊரடங்கால் செல்போன், தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு முன்பு முடங்கி கிடக்காமல், பள்ளி நாட்களை போன்று வீட்டுப்பாடங்களைப் படிக்க, எழுத வைப்பது, கலந்துரையாடுவது பெற்றோர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது என, ஆசிரியர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in