தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 834 ஆனது: பீலா ராஜேஷ் பேட்டி

தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 834 ஆனது: பீலா ராஜேஷ் பேட்டி
Updated on
2 min read

தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தொற்று எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது. இன்று இரவு 50 ஆயிரம் ரேபிட் கிட் வருவதால் ஸ்க்ரீனிங் டெஸ்ட் தொடங்க உள்ளதாக பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தினமும் நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள், வீட்டுக் கண்காணிப்பு, வீடுகளில் ஆய்வு உள்ளிட்ட சுகாதாரத்துறையின் நடவடிக்கைகள் குறித்து அதன் செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களுக்கு அறிவித்து வருகிறார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் கூறியதாவது:

“இன்று வரை கரோனா நோய் பாதிப்பு, சிகிச்சை குறித்த தமிழகத்தின் நிலை.

* வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் 59 ஆயிரத்து 918 பேர். அரசாங்க கண்காணிப்பில் உள்ளவர்கள் 213 பேர்.

* 28 நாள் தனிமைப்படுத்துதலை முடித்தவர்கள் 32, 296 பேர். இதுவரை எடுக்கப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை 7267. அதில் நேற்றுவரை நோய்த்தொற்று உறுதியானது 738 பேர். இன்று நோய்த்தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 96.

* இன்று நோய்த்தொற்று உறுதியான 96 பேரில் 84 பேர் ஒரே தொற்று உள்ளவர்கள். 12 பேரில் 3 பேர் சுயமாக மாநிலங்களுக்கிடையே பயணம் செய்தவர்கள். 9 பேர் நோய்த்தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். அதில் ஒருவர் தனியார் மருத்துவர்.

* இன்றைய மொத்த நோய்த்தொற்று எண்ணிக்கை 834 ஆக உயர்வு.

* இதுவரை 34 மாவட்டங்களில் கண்காணிக்கும் பணியில் ஆய்வு செய்யப்பட்ட வீடுகள் 16 லட்சத்து 61 ஆயிரத்து 487. கண்காணிப்புப் பணியில் சந்தித்த மக்கள் 58 லட்சத்து 77, 348 பேர். களத்தில் இருந்த பணியாளர்கள் 32 ஆயிரத்து 807 பேர்.

* அரசு மருத்துவமனையில் உள்ள 6 நோயாளிகள் சற்று தீவிர சிகிச்சையில் உள்ளனர். தனியார் மருத்துவமனையில் ஒருவர் தீவிர சிகிச்சையில் வென்டிலேட்டரில் உள்ளார். இதுவரையில் சிகிச்சை முடிந்து உடல நலம் தேறி டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 27 பேர்.

* ஒரே தொற்று, ஒரே குழுவாக பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 1480. முதலில் 1103 ஆக இருந்தது. அரசின் வேண்டுகோளை ஏற்று தங்களை சோதனைக்கு பலரும் உட்படுத்திக்கொண்டதால் படிப்படியாக அந்த எண்ணிக்கை அதிகரித்து 1480 ஆக இருக்கிறது. இந்த 1480 பேரில் நேரடியாகச் சென்று வந்தவர்களில் நோய்த்தொற்று உறுதியானது 763 பேர். 1480 பேரில் 926 பேருக்கு நோய்த்தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

* சுயமாகச் சென்றவர்கள் 554 பேர். அவர்கள் மூலமாக தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 158. வெளிநாடு சென்று வந்தது போன்று வேறு காரணங்களால் நோய்த்தொற்றுக்கு உள்ளான மற்றவர்கள் எண்ணிக்கை 71.

* இன்று காலை தமிழக முதல்வர் 12 குழுக்களுடன், அரசு உயர் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார், விரிவான பிரஸ் மீட் நடத்தியுள்ளார். அவர் பெரும்பாலான விஷயத்தை பேட்டியாக தெரிவித்து விட்டார். அவர் தெரிவித்தப்படி ரேபிட் கிட் இன்றிரவு வருகிறது. ஏற்கெனவே இருந்த கிட் வைரஸின் ஆர்.என்.ஏவை சோதிக்கும். தற்போது வர உள்ள ரேபிட் கிட்ஸ் ரத்தத்தில் உள்ள ஆன்டிபாடியை ஆய்வு செய்யும். முடிவு அரைமணி நேரத்தில் தெரியும். இது ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த கிட் ஆகும்.

* இன்றிரவு 50 ஆயிரம் கிட் வருகிறது. இதில் ரிசல்ட் 30 நிமிடத்தில் தெரிந்துவிடும். அதில் பாதிப்பு ஏதும் இருந்தால் தெரிந்துவிடும்.

* நேற்று கரோனா தொற்று உறுதியான 4 பேரின் தொடர்பு குறித்த வரலாறு தெரியாமல் இருந்தது. தற்போது 4 பேருக்கும் தொற்று எங்கிருந்து ஏற்பட்டது என்பதற்கான தொடர்புடைய விவரங்களை எடுத்துவிட்டோம்.

* தயவுசெய்து நான் பொதுமக்களை கேட்டுக்கொள்வது, இந்த நோயின் தீவிரம் யாருக்குமே தெரியவில்லை. நோய் பல்வேறு விதத்தில் பரவுகிறது. உலக அளவில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதத்தில் நோயின் தாக்கம் உள்ளது. தயவுசெய்து நாங்கள் சொல்வதைக் கடைப்பிடியுங்கள். அடிக்கடி கைகளைக் கழுவுங்கள். இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்”.

இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in