

கரோனா வைரஸ் பரவல் தடுக்க உதவும் முகக்கவசங்களை தயாரிக்கும் பணியில் மதுரை மத்திய சிறைக் கைதிகள் தீவிரம் காட்டியுள்ளனர். அரசுத் துறையினருக்கு தேவையான முகக்கவசங்களை தயாரித்து வழங்குகின்றனர்.
மதுரை மத்திய சிறையில் தண்டனை, விசாரணை மற்றும் பெண் கைதிகள் என, 1200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தண்டனைக் கைதிகளுக்கு தையல் பயிற்சி, உணவு, கட்டிட பொருட்கள் தயாரித்தல் போன்ற பல்வேறு பயிற்சிகளும் சிறைத்துறை நிர்வாகம் சார்பில், தொடர்ந்து அளிக்கப்படுகின்றன.
இந்நிலையில் கரோனா வைரஸ் பரவல் தடுக்க, நாடேங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், இந்த தொற்றுப் பரவிலில் இருந்து ஒவ்வொருவரையும் பாதுகாக்க முகக்கவசம் என்பது முக்கிய தேவையாக இருக்கிறது.
இதன் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு முதல்கட்டமாக அரசுத்துறைகளுக்கு தேவையான முகக்கவசங்களை மதுரை மத்திய சிறையில் தையல் பயிற்சி பெற்ற ஆண், பெண் கைதிகளால் தயாரித்து விநியோகிக்க சிறைத்துறை டிஐஜி பழனி நடவடிக்கை எடுத்தார்.
இதன்படி, சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா மேற்பார்வையில் சுகாதாரமான முறையில் சுமார் 1 லட்சம் முகக்கவசங்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணி 25-ம் தேதி தொடங்கியது. பெண் கைதிகள் உட்பட 40 பேர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
காவல்துறைக்கு 12,500, சுகா தாரத்துறைக்கு 4 ஆயிரம், கல்வி துறைக்கு 500 என, பல்வேறு பல்வேறு துறைகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன. தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில், 15 ஆயிரம் முககவசங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற மேலும், பல அரசு துறையினரும் தேவையை பொறுத்து ஆர்டர் கொடுத்துள்ளதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவிக்கிறது.
இது தொடர்பாக சிறைத்துறை டிஐஜி பழனி கூறுகையில், மதுரை சிறையில் பல்வேறு பயிற்சி பிரிவுகள் செயல்படுகின்றன. தற்போது கரோனா தடுப்புக்கு முக்கிய தேவையாக கருத்தப்படும் முகக்கவசம் தயாரிக்க திட்டமிட்டோம்.
இதற்காக சிறையிலுள்ள டெய்லரிங் பிரிவிலுள்ள சுமார் 40 பேர் இப்பணியில் ஈடுபடுத்தி உள்ளோம். சுகாதாரம், பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்படும் முகக்கவசங்கள் முதலில் காவல்துறை, சுகாதாரம் உட்பட அரசுத்துறை களுக்கு வழங்குகிறோம்.
தேவையைப் பொறுத்து கூடுதலாகத் தயாரிக்கும் பட்சத்தில் பொதுமக்களும், தனியார் நிறுவனங்களுக்கும் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் கிடைக்கும் தொகையை பணியில் ஈடுபடும் கைதிகளுக்கு சம்பளமாக வழங்கப்படும்,’’ என்றார்.