கரோனா: அனைத்து எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் தலா ரூ.1 கோடியைப் பயன்படுத்த உத்தரவு; ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி பதில்

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்தில் அனைத்து எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடியைப் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி இன்று (ஏப்.7) வெளியிட்ட அறிக்கையில், "எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் கொடுத்த நிதியினை, நிர்வாகம் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்றும், அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று என்றும், இப்பிரச்சினையில் முதல்வர் கவனிக்கவும் என்றும் பதிவிட்டுள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் வழிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்தான், சட்டப்பேரவை உறுப்பினர்களின் பரிந்துரையின்படி, வரையறுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு அந்நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். இதை அறியாமல், எதிர்கட்சித் தலைவர் ட்விட்டரில் விதிமுறைகளின்படி செய்ததைக் குறை கூறியுள்ளார்.

ஏற்கெனவே கரோனா தொற்றுநோய் தடுப்புப் பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு, அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் விரும்பினால் ரூ.25 லட்சம் அந்தந்தத் தொகுதியில் செலவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

மேலும், கரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுக்க மாவட்ட மற்றும் மாநில அளவில், மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்குவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி ரூபாயினை, மாநில அளவில் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசு பயன்படுத்திக்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in