

இருசக்கர வாகன ஓட்டிகள் தயவு செய்து தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஏப்.7) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது ஒட்டுமொத்த தமிழக மக்களின் கடமையாக இருக்கிறது.
குறிப்பாக, நாளுக்கு நாள் கரோனாவின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே போகிறது. அப்படி இருக்கும் போது சென்னை உள்ளிட்ட பெருநகரம் மற்றும் பல்வேறு மாவட்ட பகுதிகளில் அவசியமில்லாமல் இருசக்கர வாகனப் போக்குவரத்தை பலர் மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது. இவர்கள் 144 தடை உத்தரவை மதிக்கவில்லை, கரோனா வைரஸ் பரவலால் ஏற்படும் பாதிப்பை உணரவில்லை.
மேலும், ஊர் சுற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டு சிறு தண்டனை பெற்றாலும் அவர்களை பார்த்து மற்ற இருசக்கர வாகன ஒட்டிகள் திருந்துவதாக தெரியவில்லை.
அதாவது, தேவையற்ற பயணத்தால் காவல்துறையினரிடம் சிக்கிக்கொள்ளும் போது விழிப்புணர்வுக்காக திருக்குறள் சொல்ல சொல்வது, துண்டு பிரசுரங்கள் படிக்க வைப்பது, தோப்புக்கரணம் போடச் செய்வது மற்றும் சில சமயம் அடிப்பது போன்றவை எல்லாம் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாடமாக அமைந்திருக்கிறது.
இருப்பினும் தேவையற்ற பயணத்தை மேற்கொள்ளும் இருசக்கர வாகன ஒட்டிகள் திருந்தியதாக தெரியவில்லை. இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்திருப்பதும், சிறு சிறு தண்டனைகள் கொடுத்திருப்பதும் போதாது. ஏனென்றால், கரோனா வைரஸின் தாக்கமும், அச்சமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்ற வேளையில் நோய் பரவலின் பாதிப்பை அலட்சியம் செய்யும் விதமாக இவர்கள் பயணம் செய்கின்றனர்.
எனவே, தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் தான் திருந்தாத உள்ளங்கள் பயந்து, திருந்தும். நோயைக் கண்டு அச்சப்படாதவர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படும்போது அலட்சியத்தை தவிர்ப்பார்கள்.
மேலும், அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு உடனடி தண்டனையாக காவல்துறையின் சாலைப்போக்குவரத்துப் பணியில் காலை முதல் மாலை வரை ஊரடங்கு முடியும் வரை கட்டாயமாக ஈடுபடுத்திட தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு, காவல்துறைக்கு உத்தரவும் பிறப்பிக்க வேண்டும்.
இதன் மூலமாவது தேவையற்ற பயணம் செய்யும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அச்சம் ஏற்பட்டு தேவைக்கு மட்டுமே பயணம் செய்வார்கள். அது மட்டுமல்ல, இந்த அறிவிப்பு கண்டிப்பாக நடைமுறைக்கு வர வேண்டும். அதை பார்க்கும் பொதுமக்கள் எவரும் அத்தியாவசிய அவசியத் தேவையைத் தவிர வேறு எதற்காகவும் வெளியில் செல்ல மாட்டார்கள்.
இருசக்கர வாகன ஓட்டிகளே தயவு செய்து தேவையற்ற பயணத்தை தவிர்க்க, தண்டனையிலிருந்து தப்பிக்க, கரோனா ஒழிப்புக்கு உதவிகரமாக இருக்க முன்வர வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.