

கிருஷ்ணகிரியில் 8 டன் மல்லிகைப் பூக்கள் வீணானதால், நாள்தோறும் ரூ.30 லட்சம் இழப்பினை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், அவதானப்பட்டி, நாட்டாண்மைக்கொட்டாய், மலையாண்ட அள்ளி, வேலம்பட்டி, போச்சம்பள்ளி, மத்தூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் ஆயிரக்கான ஏக்கர் பரப்பளவில் மல்லிகைப் பூக்கள் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
இங்கு சாகுபடி செய்யப்படும் மல்லிகை, சரக்கு வாகனங்களில் பெங்களூரு சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றது. அங்கு ஏலம் முறையில் பூக்கள் விற்பனை செய்யப்பட்டு, அங்கிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மல்லிகைப் பூக்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, "பெங்களூரு சந்தைக்கு தினமும் 10 டன் பூக்களும், விழாக்காலங்களில் அதிகபட்சம் 20 டன் பூக்களும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த 10 நாட்களாக ஊரடங்கு உத்தரவால் வெளிமாநிலங்கள் மூலம் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியும், உள்ளுர் வர்த்தகமும் முற்றிலும் முடங்கியுள்ளது.
இதனால் நாள்தோறும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் மல்லிகைப் பூக்கள், செடிகளில் பறிக்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால் பூக்கள் மலர்ந்து செடிகளும் வீணாகி வருகின்றன. பூக்கள் பறிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயக் கூலித் தொழிலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒவ்வொரு நாளும், சுமார் ரூ.30 லட்சத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, மலர் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அலுவலர்களிடம் கேட்ட போது, "கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரங்களில் 787 ஏக்கர் பரப்பளவில் மல்லிகைப் பூக்கள் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவால், 8 டன் மல்லிகைப் பூக்கள் பறிக்கப்படாமல் செடிகளிலேயே உள்ளது. 2 டன் பூக்கள் திருப்பத்தூர் பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது" என்றனர்.