

கர்ப்பிணிகள், குழந்தைகள், புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் தனியார் மருத்துவமனைகளின் பதிவு ரத்து என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், சில தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. பல்வேறு இடங்களில் தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், தொடர் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகள், சிறுநீரக பாதிப்பு மற்றும் புற்றுநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழக அரசுக்கும் புகார்கள் சென்றன. இதையடுத்து, கர்ப்பிணிகள், குழந்தைகள், புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் (டிஎம்எஸ்) டாக்டர் டி.எஸ்.ஸ்வாதி ரத்னாவதி, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மகப்பேறு மருத்துவம், குழந்தை மருத்துவம், பேறுகாலத்துக்கு பிந்தைய கவனிப்பு, நரம்பியல் மருத்துவம், சிறுநீரகம் பாதித்தவர்களுக்கு ரத்த சுத்தி கரிப்பு, புற்றுநோயாளிகளுக்கு கீமோதெரபி ஆகியவற்றை தடையின்றி வழங்க வேண்டும்.
நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிக்க மறுப்பது சட்டத்துக்கு எதிரானது. இந்த அறிவுறுத்தலையும் மீறி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுத்தால், சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் பதிவு ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.