

கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு, நாள் அதிகரிக்கிறது. மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கரோனாவை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்., 14ம் தேதி வரை அமலில் உள்ளது.
வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க, கைகளை நன்கு சுத்தம் செய்தல், இருமல், தும்மலின்போது, பிறருக்கு பரவிடாமல் பாதுகாப்பாக இருத்தல், சமூக விலகல் கடைபிடித்தல், கூட்டம் கூடுவதை தவிர்த்தல், சமீபத்தில் வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியவர்கள், வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர்களுக்கு வந்தவர்கள் தனித் திருத்தல் போன்ற தடுப்பு முறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.
அத்தியாவசியத் தேவைக்கென குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வெளியில் வரவேண்டும் என, காவல்துறையினர் வலியுறுத்துகின்றனர். செஞ்சிலுவைச் சங்கம் போன்ற தன்னார்வலர்களும் கரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இது போன்ற நடவடிக்கை ஒருபுறமும் இருந்தாலும், பல்கலை, கல்லூரிகளில் செயல்படும் என்எஸ்எஸ், என்சிசி திட்ட அலுவலர்கள், மாணவர்களும் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு விழிப்புணர்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களை வீட்டில் இருந்தபடி, சமூக வலைத்தளஙகளில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என, மத்திய, மாநில அரசு அறிவுறுத்தி உள்ளன.
இதற்கான விழிப்புணர்வு கார்ட்டூன் சித்தரங்கள், வரை படம், விழிப்புணர்வு வாசங்களுடன் கூடிய வீடியோ காட்சிகளை தயாரித்து என்எஸ்எஸ், என்சிசி திட்ட அலுவலர்களுக்கு கிடைக்கச் செய்துள்ளனர்.
இவர்கள் வாயிலாக தமிழத்திலுள்ள அரசு, தனியார் கல்லூரிகள், பல்கலைககழகங்களில் செயல்படும் என்எஸ்எஸ், என்சிசி மாணவ, மாணவியர்கள் தங்களுடன் சமூக வலைத்தள குரூப்பில் இணைந்துள்ள உறவினர்கள், நண்பர்களுக்கு பிரச்சாரம் செய்கின்றனர்.
மேலும், புதிய குரூப் நண்பர்களை உருவாக்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர் என, என்சிசி, என்எஸ்எஸ் திட்ட அலுவலர், ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தியாகராசர் கல்லூரி என்எஸ்எஸ் திட்ட அலுவலர் அருணா கூறுகையில், ‘‘தன்னார்வலர்கள் என்ற அடிப்படையில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்து எங்களது மாணவர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. விழிப்புணர்வு புகைப்படம், வரைபடங்கள், வாசகங்கள் மற்றும் இலவச தொலைபேசி எண்கள் அடங்கிய மெட்டிரீயல் கிடைத்துள்ளன.
இவற்றின் அடிப்படையில் சமூக தலைத்தளங்களில் கரோனா தடுப்பு முறை பற்றி ஆர்வமுடன் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். என்னை போன்ற திட்ட அலுவலர்கள் மாணவர்களை கண்காணிப்பதோடு, நாங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்றார்.