

கரோனா தாக்கம் எதிரொலியாக மதுரை உட்பட தென்மாவட்ட மருத்துவமனைகளுக்குத் தேவையான முக்கிய மருந்துப் பொருட்கள் சிறப்பு ரயில் மூலம் வந்தன.
கரோனா வைரஸ் பரவல் தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைக்கான வாகனங்கள் தவிர, பிற அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப் பட்டுள்ளன.
ரயில்களைப் பொறுத்தவரை அத்தியாவசியத் தேவைக்கான பொருட்கள் கொண்டு செல்வதற்கு ஒவ்வொரு வழித்தடத்திலும், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் மருந்து பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில் ஒவ்வொரு நாளும் மாவட்டம் வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால் முக்கிய மருந்து பொருட் கள், மருத்துவ உபகரணங்கள் தேவைகள் என்பது அவசியமாக உள்ளன.
இதையொட்டி மதுரை உட்பட தென்மாவட்டங்களில் அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு முக்கிய மருந்து உள்ளிட்ட பொருட்களின் தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சென்னை- நாகர்கோயிலுக்கு பார்சல் கார்கோ சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றை இயக்க நடவடிக்கை எடுத்தது. இதன்படி, அந்த சரக்கு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்டது.
அதில் மருந்துவம் உட்பட பிற அத்தியாவசிய பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு விழுப்பபுரத்திலும், 11.10 மணிக்கு திருச்சி யிலும் நின்று பொருட்களை இறங்கிய அந்த ரயில் மதியம் 2 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தது.
அங்கு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பார்சல்களை இறக்கியது. தொடர்ந்து நெல்லை, நாகர் கோயில் ரயில் நிலையங்களிலும் அந்த ரயில் அத்தியாவசிய பொருட்களை இறக்குகிறது என, மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.