

புதுச்சேரி அருகே சட்டவிரோதமாக வீட்டில் சாராயம் தயாரித்ததைக் கண்டுபிடித்த கலால்துறையினர் 1,000 லிட்டர் சாராயம் மற்றும் சீலிங் மிஷின் உள்ளிட்ட பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவையடுத்து, அனைத்து மதுக்கடைகள் மற்றும் கள், சாராயக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி தடையை மீறி மது பாட்டில்கள் மற்றும் சாராயத்தை ஒரு சிலர் கள்ளத்தனமாக விற்பனை செய்து வருகின்றனர்.
இதுபோல், கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதனிடையே, சட்டத்துக்குப் புறம்பாக மது பாட்டில்கள் மற்றும் சாராய விற்பனையைத் தடுக்க புதுச்சேரி கலால்துறை சார்பில் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரி திருபுவனை அடுத்த ஆண்டியார்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளி அருகில் உள்ள ஒரு வீட்டில் சட்டத்துக்குப் புறம்பாக சாராயம் தயார் செய்வதாக கலால் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் துணை ஆணையர் தயாளன் தலைமையில் வட்டாட்சியர்கள் காசிநாதன், பாலகிருஷ்ணன், துணை வட்டாட்சியர்கள் அய்யனார், குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று (ஏப் 1) சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு வீட்டின் தோட்டத்தில் சட்டத்துக்குப் புறம்பாக சாராயம் தயார் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 கேன்களில் 1,000 லிட்டர் சாராயம் மற்றும் 200 மில்லி அளவுள்ள 1,350 பாக்கெட்டுகள், சீலிங் மிஷின், அளவைகள், காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவற்றைக் கலால் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இவற்றின் மதிப்பு ரூ.1.50 லட்சமாகும். மேலும், இது தொடர்பாக இடத்தின் உரிமையாளர் ஆண்டியார்பாளையத்தைச் சேர்ந்த ராஜசேகரன் மீது வழக்குப் பதிவு செய்து கலால்துறை போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர்.