

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2,199 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
"கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை வெளிநாடுகளில் இருந்து 431 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து 1,330 பேரும், வெளி மாவட்டங்களில் இருந்து 438 பேரும் என மொத்தம் 2,199 பேர் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மொத்தம் 20 பேர் டெல்லிக்குச் சென்றுள்ளனர். இதில் 18 பேர் கடந்த பிப்ரவரி மாதம் டெல்லிக்குச் சென்று திரும்பியவர்கள். 30 நாட்கள் ஆகியும் அவர்களிடம் எந்த நோய்க்கான அறிகுறிகளும் இல்லை. நலமாக உள்ளனர். ஆனாலும் அவர்களை ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வரை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
19-வது நபர் மார்ச் மாதம் 23-ம் தேதி வீடு திரும்பியுள்ளார். இதுவரை அவருக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை. அவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது ரத்த மாதிரி சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை முடிவு வரவில்லை. 20-வது நபர் டெல்லியில் உள்ளார். அவர் வீடு திரும்பவில்லை. இதைத் தவிர குஜராத்தைச் சேர்ந்த 58 பேர் வெவ்வேறு இடங்களில் உள்ளனர். அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்".
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.