

பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் ஏடிஎம் இயந்திரங்கள் கிருமிநாசினிகள் தெளித்து பராமரிக்கப்படுமா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.
கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவுவது, பலர் பயன்படுத்தும் இடங்களை கிருமிநாசினிகளைத் தெளித்து தூய்மைப்படுத்துவது வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி போன்றவை சுகாதாரத்துறையின் முக்கிய பரிந்துரைகள் ஆகும்.
இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கைகழுவதற்கான ஏற்பாடுகள், சானிடைசர்கள் பயன்படுத்துதல் போன்றவற்றிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அதேநேரத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஏடிஎம் இயந்திரங்கள் கிருமிநாசினிகள் தெளித்து பராமரிக்கப்படுமா? என்று எதிர்பார்க்கின்றனர் வாடிக்கையாளர்கள்.
இது குறித்து கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த நிஷாந்த் உதயகுமார் என்பவர், 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது: ''நம்முடைய அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக, தங்கள் வங்கிக் கணக்கில் உள்ள சேமிப்பை ஏடிஎம் அட்டைகளைப் பயன்படுத்தி பணம் எடுக்கிறோம். இதனால் அன்றாட பயன்பாட்டுப் பொருளாக ஏடிஎம் இயந்திரங்கள் மாறிவிட்டன.
கரோனா வைரஸ் தொற்று மக்களிடையே பரவாமல் தடுக்கும் வகையில் கைகளைக் கழுவுதல், அடிக்கடி அல்லது பலர் தொடும் இடங்களை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாள்தோறும் பலர் பயன்படுத்தும் ஏடிஎம் இயந்திரங்களில் இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்படாமல் இருப்பது, வாடிக்கையாளர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது.
ஏடிஎம் கதவின் கைப்பிடி, இயந்திரத்தின் கீபேடு போன்றவை பலரால் தொடர்ச்சியாகத் தொடுதலுக்கு உட்படுகிறது. எனவே இவற்றை நாள்தோறும் கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்ய வேண்டும். காவலர்கள் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் கிருமிநாசினி பாட்டில்களை வைக்க வங்கி நிர்வாகங்கள் முன்வர வேண்டும். இதனால் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, சமூகத்தையும் பாதுகாக்கலாம்''.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் கோவை மாவட்ட செயலர் ஆர்.மகேஷ்வரன் கூறும்போது, ''கோவை மாவட்டத்தில் 650 வங்கிக் கிளைகளும், 500-க்கும் மேற்பட்ட ஏடிஎம் இயந்திரங்களும் உள்ளன. கரோனா வைரஸ் தொற்று மக்களிடையே பரவாமமல் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊடங்கு உத்தரவு காலகட்டத்திலும், வங்கி ஊழியர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான சேவைகளைத் தடையின்றி வழங்கி வருகின்றனர்.
தங்கள் வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அனைத்து வங்கிகளும், தங்கள் பராமரிப்பில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களை கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்து பராமரிக்க முன்வர வேண்டும். சில வங்கிகள் இப்பணியை மேற்கொண்டு வருகின்றன. அனைத்து வங்கிகளிலும் இதைப் பின்பற்ற வேண்டும்' என்றார்.