புதுச்சேரி அருகே ஐஸ் பெட்டியில் பதுக்கி வைத்திருந்த 1,000 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்

ஆட்டிறைச்சி பறிமுதல்.
ஆட்டிறைச்சி பறிமுதல்.
Updated on
1 min read

புதுச்சேரி அருகே ஐஸ் பெட்டியில் பதுக்கி வைத்திருந்த 1,000 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியிலும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இறைச்சி வாங்குவதற்காக புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவையும் மீறிக் குவிந்தனர். மேலும் தினமும் பலர் வீட்டை விட்டு வெளியே வருவது, இருசக்கர வாகனங்களில் சுற்றுவதுமாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (ஏப்.1) முதல் காலை 6 மணி முதல் பகல் 2.30 மணி வரை மட்டுமே பெட்ரோல் பங்க் உள்ளிட்ட கடைகள் திறந்திருக்கும் என்றும், மருந்துக் கடைகள், பால் கடைகளுக்கு மட்டும் விதிவிலக்கு என்றும் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை புதுமேட்டுத் தெருவைச் சேர்ந்த சித்திக் (42) என்பவர் சுல்தான்பேட்டை மெயின்ரோட்டில் ஆட்டிறைச்சிக் கடை வைத்து தொழில் செய்து வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெட்டப்பட்ட ஆட்டிறைச்சியை விற்பனை செய்தது போக மீதமுள்ள 1,000 கிலோ இறைச்சியை பின்னர் விற்பதற்காக அவற்றை பிளாஸ்டிக் பைகளில் கட்டி, ஐஸ் பெட்டியில் வைத்துள்ளார்.

இது சம்பந்தமாக வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகத்துக்கு ரகிசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் நேற்று (மார்ச் 31) இரவு வில்லியனூர் போலீஸாருடன் சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று சோதனை நடத்தினார்.

அப்போது, ஐஸ் பெட்டியில் 1,000 கிலோ ஆட்டிறைச்சி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது உறுதியானது. அதனைத் தொடர்ந்து அவை அனைத்தையும் பறிமுதல் செய்த ஆணையர் ஆறுமுகம், ஆசிட் மற்றும் பினாயில் ஊற்றி அழித்தார்.

இன்று (ஏப்.1) அழிக்கப்பட்ட இறைச்சியை வில்லியனூர் பகுதியில் பள்ளம் தோண்டி புதைத்தனர். மேலும், கடைக்கு சீல் வைக்கவும், உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in