Published : 01 Apr 2020 07:40 AM
Last Updated : 01 Apr 2020 07:40 AM

கரோனா தொற்று பரவலை தடுக்க சமூக விலகலை கடைபிடிக்காத கடைகள் மூடல்

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் காய்கறி வாங்கும் இடங்கள், மீன் மார்கெட் போன்ற இடங்களில் கூட்டம் அதிகம் வருவதால் சமூகவிலகலை கடைபிடிப்பது பொதுமக்களுக்கு சவால் நிறைந்ததாக உள்ளது.

காஞ்சிபுரம் ராஜாஜி மார்கெட், ரெட்டிப்பேட்டை, தும்பவன தெரு, புத்தேரி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகம் உள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் பல மளிகை கடைகளில் சமூக விலகலை கடைப்பிடிக்க முடியாத சூழல் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

பட்டாபிராம், தண்டுரை பகுதியில் உள்ள ஆவடி மாநகராட்சிக்கு சொந்தமான மீன் சந்தையில் சமூக விலகலை கடைபிடிக்காததால் அதை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக மூடியுள்ளனர்.

திருவள்ளூர், சத்தியமூர்த்தி தெருவில் உள்ள மளிகை கடைஒன்று சமூக விலகலை கடைப்பிடிக்காததால் மூடப்பட்டது. சமூகவிலைகளை கடைபிடிக்கும் நோக்கில் திருத்தணி, ம.பொ.சி.சாலையில் இருந்த காய்கறி சந்தைக்கு மாற்றாக திருத்தணி பஸ்நிலையத்தில் நேற்று தற்காலிக காய்கறி சந்தை செயல்படத் தொடங்கியது.

பொன்னேரியில் பெரும்பாலான உணவு விடுதிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மருத்துவமனை ஊழியர்கள், உள்நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 300-க்கும் மேற்பட்டோருக்கு நாள்தோறும் சமூக ஆர்வலர்கள் உணவு வழங்கி வருகின்றனர்.

அமைச்சர் ஆலோசனை

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் கரோனாதடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பேசும்போது, "கரோனா தொற்று நோய் கட்டுப்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மக்களுக்கு தங்கு தடையின்றி அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மொத்தம் 841 ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

தொழிலாளர் தங்கும் விடுதி

திருப்போரூர் அடுத்த தையூரில் கட்டுமான தொழிலாளர்கள் தங்குவதற்காக ரூ.16.75 கோடி மதிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு விடுதிஅமைக்கப்பட்டது. இதேபோல், எழிச்சூர் பகுதியிலும் கட்டிடம் அமைக்கப்பட்டது.

இந்த கட்டிடங்கள் இதுவரைபயன்பாடின்றி வீணாக கிடந்தன. இந்நிலையில், தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் புறநகர் பகுதிகளில் ஏராளமான வடமாநில கட்டுமானத் தொழிலாளர்கள், தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் பல்வேறு இடங்களில் முகாம்களில் தங்கியுள்ளனர்.

இத்தொழிலாளர்களை மேற்கண்ட கட்டிடத்தில் தங்கவைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் இக்கட்டிடத்தை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்குஉள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த கட்டிடத்தை கரோனாதொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாகவோ அல்லது தொழிலாளர்களை தங்கவைப்பதற்காகவோ பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

நிதியுதவிகள்

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக உத்திரமேரூர் தொகுதியில் மேற்கொள்ள உள்ள பணிகளுக்காக காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்டச் செயலரும், உத்திரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினருமான க.சுந்தர் ரூ.20 லட்சத்து 52 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

இதேபோல் காஞ்சி மத்திய மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சார்பில் ரூ.4.5 லட்சம் காசோலையை ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் முன்னிலையில் ஆட்சியர் ஜான்லூயிஸிடம் அந்தக் கட்சியினர் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x